Saturday, April 20, 2024
Home » சரியான தலைமைத்துவத்தினால் பொருளாதார முன்னேற்றம்

சரியான தலைமைத்துவத்தினால் பொருளாதார முன்னேற்றம்

by sachintha
February 8, 2024 6:00 am 0 comment

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொள்கை விளக்க உரையின் ஊடாக நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையாகும்.

அதாவது 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன் ஊடாக நாட்டின் அரசியலும் கொதிநிலையை அடைந்து அன்றைய அரசாங்கமும் ஜனாதிபதியும் கூட பதவி விலகும் நிலை உருவானது.

இந்நெருக்கடியான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்று மக்கள் முகம்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க எவரும் முன்வராத நிலைமை ஏற்பட்டது.

அவ்வாறான சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துணிச்சலுடன் முன்வந்து நாட்டின் தலைமையை ஏற்றார். இந்நாட்டின் பாராளுமன்ற அரசியலில் சுமார் ஐந்து தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ள தற்போதைய ஜனாதிபதி, இந்நாட்டின் பிரதமர் பதவியை ஐந்து தடவைகள் வகித்துள்ளார். இவற்றின் ஊடாகப் பெற்றுள்ள பரந்த அனுபவம் மற்றும் அறிவின் பின்புலத்தைக் கொண்டு நாட்டின் தலைமைப் பதவியை ஏற்ற ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை துரிதமாக மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அவ்வேலைத்திட்டங்கள் யாவும் நாட்டு நலன்களை முன்னிலைப்படுத்தியவையாகும்.

எந்தவொரு வேலைத்திட்டமும் அரசியல் இலாபம் பெறும் நோக்கிலோ, கட்சி நலன்களை அடிப்படையாகக் கொண்டோ முன்னெடுக்கப்பட்டதாக இல்லை. கட்சி நலன்களுக்கு பாதகமான போதிலும் கூட நாட்டு நலன்களுக்கு முன்னுரிமை அளித்துத்தான் அனைத்து முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. அனைத்து வேலைத்திட்டங்களும் வெளிப்படைத்தன்மை கொண்டவையாகும். அதனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றன.

இவ்வேலைத்திட்டங்களின் பயனாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாகவும் வேகமாகவும் நாட்டினால் மீட்சி பெற முடிந்தது.

ஆனால் உலகில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான வேறு எந்த நாட்டினாலும் இவ்வாறு விரைவாக மீட்சி பெற முடியவில்லை.

கிரேக்கம் 2009 இல் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்நாடு பொருளாதார மீட்சி பெறுவதற்கு 10 ஆண்டுகள் சென்றன. ஆனால் இலங்கைக்கு அவ்வாறான நீண்ட காலப்பகுதி பொருளாதார மீட்சிக்கு தேவைப்படவில்லை. அதற்கான ஜனாதிபதி முன்னெடுத்த வெளிப்படைத்தன்மை மிக்க பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களே காரணமாக அமைந்துள்ளன.

2022 பெப்ரவரியில் இந்நாடு இருந்த நிலையை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் 2023 பெப்ரவரி மாதமளவில், இந்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டுவர முடிந்தது. இவ்வருடம் பெப்ரவரியாகும் போது கடந்தாண்டு பெப்ரவரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது. குறிப்பாக கடந்தாண்டு 50.06 சதவீதமாக இருந்த பணவீக்கம், இன்று 6.4 சதவீதத்திற்கு வீழச்சியடைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் 54.4 சதவீதத்தில் இருந்து இன்று 3.3 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. டொலரின் பெறுமதி 363 ரூபாயிலிருந்து இன்று 314 ரூபாவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 2023 இல் 28 சதவீதமாக இருந்த வட்டி வீதம் தற்போது 12 சதவீதமாகக் காணப்படுகிறது.

தெரிவுசெய்யப்பட்ட கடனைச் செலுத்த முடியாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு, அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம் வரை சரிந்தது. ஆனால் 2023 டிசம்பர் நிலைவரப்படி, இந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது.

அதேநேரம் 2022 ஆம் ஆண்டில் 194,495 ஆகக் காணப்பட்ட இந்நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2023 இல் 1,487,303 பேர் வரை அதிகரித்திருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 200,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு பாரிய பொருளாதார அடைவுகளை நாடு அடைந்து கொண்டுள்ளது. இதற்கு நாட்டுக்கு அளிக்கப்படும் சரியான தலைமைத்துவமும் வெளிப்படைத்தன்மையுடனான வேலைத்திட்டங்களும்தான் அடிப்படைக் காரணம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்தப் பின்புலத்தில்தான் ஜனாதிபதி தமது கொள்கை விளக்க உரையின் போது, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் இது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்புக்காக கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு செயற்படுவது மிகவும் அவசியம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT