மருதானை - பெலியத்த; தெற்கிற்கு புதிய ரயில் சேவை ஆரம்பம் | தினகரன்


மருதானை - பெலியத்த; தெற்கிற்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்

மருதானை - பெலியத்த; தெற்கிற்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்-Maradana-Fort-New train to the South flagged off

இலங்கையின் புகையிரத துறை அபிவிருத்திக்கு இந்தியா 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி

மருதானை முதல் பெலியத்த வரையான, “தக்‌ஷிண நகராந்தர சீக்ரகாமி” (தெற்கு நகர அதிவேக புகையிரதம்) எனும் புதிய ரயில் சேவை இன்று (24) ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளது.

குறித்த ரயில் சேவை, பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படுவதோடு, பிற்பகல் 6.05 மணிக்கு பெலியத்த நகரை அடையும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மருதானை - பெலியத்த; தெற்கிற்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்-Maradana-Fort-New train to the South flagged off

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் இணைந்து இச்சேவையை இன்று ஆரம்பித்து வைத்ததோடு, அமைச்சர் மற்றும் உயர் ஸ்தானிகர் ஆகியோர் மருதானையிலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை புதிய ரயிலில் பயணித்தனர்.

“தக்‌ஷிண நகராந்தர சீக்ரகாமி” புதிய ரயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்திய கடன் திட்டங்களின் கீழ் M/s RITES Ltd. நிறுவனத்தால் இலங்கை புகையிரத திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த புதிய ரயிலானது பயணிகளுக்கான உயர் தரமான சேவையை கொண்டுள்ளதுடன் மிக வேகமானதும் சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ரயில், நவீனமயப்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் தொலைத்தொடர்பு தொகுதிகளைக் கொண்டுள்ளதோடு, இதற்கு குறைந்த பராமரிப்பு தேவையே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை - பெலியத்த; தெற்கிற்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்-Maradana-Fort-New train to the South flagged off

மேலும் இந்த ரயில் பெட்டிகள் சத்தம் மற்றும் தூசு கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்துவதுடன் ஜி.பி.எஸ் (GPS) அடிப்படையிலான பயணிகள் தரவுகளுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் 360 பாகையில் சுழலும் ஆசனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் கண்ணாடி தட்டுகளுடனான அலுமினியத்தால் செய்யப்பட்ட பொதிவைக்கும் ராக்கைகளையும் காணப்படுகின்றன.

இந்தியாவின் M/s RITES Ltd. நிறுவனத்துக்கும் இலங்கை புகையிரத திணைக்களத்துக்கும் இடையில் 2017 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டிருந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக தற்போது 06 ரயில்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடனுதவி அடிப்படையில் கடந்த 10 மாதங்களில் இந்தியாவினால் 5 ரயில் எஞ்சின்களையும் 15 சரக்கு ரயில் பெட்டிகளையும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 35 சரக்கு ரயில் பெட்டிகளும் 5 எஞ்சின்களும் விரைவில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

இலங்கையின் புகையிரத துறை அபிவிருத்திக்காக இந்தியா 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியினை இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பி. ஜயம்பதி இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம்.ஜே.டி. பெனான்டோ மற்றும் RITES Ltd இன் பொது முகாமையாளர் ஜி.ஏ. ஜிலானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...