Tuesday, April 16, 2024
Home » செவிப்புலனற்ற நபர்களுக்காக இலகுரக வாகன சாரதி உரிமம்

செவிப்புலனற்ற நபர்களுக்காக இலகுரக வாகன சாரதி உரிமம்

- 2024 தேர்தல்களை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

by Prashahini
February 6, 2024 3:10 pm 0 comment

– மார்ச் மாதம் 21 தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

முழுமையாக செவிப்புலனற்ற நபர்களுக்காக இலகுரக வாகன சாரதி உரிமம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முழுமையாக செவிப்புலனற்ற நபர்களுக்கு இலகுரக வாகன சாரதி உரிமங்களை வழங்குவதற்கான முன்னோடி கருத்திட்டம் கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி அமுல்படுத்துவதற்காக 2022-11-14 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த முன்னோடி கருத்திட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் இக்கருத்திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் முழுமையாக செவிப்புலனற்ற நபர்களுக்கு இலகுரக வாகன உரிமங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை புதுப்பிக்கும் அடிப்படையில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் – 2023-2030

2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை பேரழிவு செயலாட்சிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை தயாரித்தல் மற்றும் அமுல்படுத்துதல் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முதன்மைப் பொறுப்பாகும். அதற்கமைய, 2023 – 2030 சென்தாய் செயற்பாட்டு சட்டகம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சமவாயங்களுக்கு அமையவும், தொடர்புடைய அனைத்து விடயஞ்சார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் 2023 – 2030 தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023-2030 தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாவனை மூலம் இலங்கை வைத்தியசாலைகளில் வலுசக்தி வழங்கலை உறுதிப்படுத்தும் கருத்திட்டத்துக்கான ஜப்பான் அரசின் கருத்திட்ட உதவி

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது மருத்துவமனை, குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் சூரிய மின்சக்தி உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுதல் மூலம் மின்சார வசதிகளை வழங்குவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஊடாக 1,230 மில்லியன் ஜப்பானிய யென் கருத்திட்ட உதவியாக (ஏறத்தாழ 2.8 பில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. சுகாதார துறையில் புதுப்பிக்கத்தக்கப்படாத வலுசக்தி பாவனையை குறைத்தல், சுகாதார சேவைகள் பிரிவின் ஒட்டுமொத்த வினைத்திறனை அதிகரித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துதல் இக்கருத்திட்டத்தின் நோக்கமாக அமைகின்றது. அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்துதல் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையில் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு தொழில்முயற்சி மேம்படுத்தல் மூலோபாயம்

பசுமை தொழில்முயற்சிகள் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய மக்களை வலுவூட்டும் சமூக தொழில்முயற்சிகள் அடங்கலாக சாதகமான சமூக மற்றும் சுற்றாடல் தாக்கங்களை ஏற்படுத்தும் வர்த்தக ரீதியான சாத்தியமுள்ள மாதிரிகளுடனான குறிக்கோளின் அடிப்படையில் தொழில்முயற்சிகள் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு தொழில்முயற்சிகள் (Inclusive and Sustainable Businesses – ISBs) என அழைக்கப்படுகிறது. இலங்கையில் தற்போதுள்ள உள்ளடக்கிய மற்றும் பேண்தகு தொழில்முயற்சிகளுக்காக (ISBs) போதுமானளவு தகவல்கள், திறன்விருத்தி பயிற்சிகள், பங்குடமை, நிதி வசதிகள் மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட அங்கீகாரம் போன்றவற்றுக்கான அணுகுமுறை இல்லாதிருப்பதால் குறித்த தொழில்முயற்சிகளின் விருத்தி மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் சாதகமான தாக்கங்கள் வரையறுக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

ஆகவே, உள்ளடக்கிய மற்றும் பேண்தகு தொழில்முயற்சிகளின் (ISBs) அபிவிருத்திக்கு உதவும் போதும், வசதிகளை வழங்கும் போதும் தேசிய தொழில்முயற்சிகள், கைத்தொழில்கள், நிதி மற்றும் முதலீட்டாளர்களுக்கு உரிய அரச கொள்கைகளுக்கு உள்ளடக்கிய மற்றும் பேண்தகு தொழில்முயற்சிகளுக்காக (ISBs) மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக விசேட மூலோபாய தேவைப்பாடுகள் தோன்றியுள்ளன.

அதற்கமைய, இலங்கை பேண்தகு அபிவிருத்தி சபையினால் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP) வர்த்தக, முதலீட்டு மற்றும் புத்தாக்க பிரிவின் ஒத்துழைப்புடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு “பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையில் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு தொழில்முயற்சிகளுக்காக (ISBs) மேம்படுத்தும் மூலோபாயம்” தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மூலோபாயத்தை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. ஐக்கிய அமெரிக்காவின் விவசாய திணைக்களத்தின் உதவியின் கீழ் இலங்கையின் சந்தை கூட்டமைப்பு ஊடாக சுய கட்டுப்பாடு, அறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்தும் கருத்திட்டம் – கட்டம் II

சந்தைக் கூட்டமைப்பின் மூலம் சுய கட்டுப்பாடு, அறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் விவசாய திணைக்களம் மற்றும் ; Save the Children நிறுவனம் ஊடாக 26 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கொடை 2018 ஆண்டில் ஐக்கிய அமெரிக்க அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டம் 2024 ஆண்டின் இரண்டாவது காலாண்டாகும் போது நிறைவடையவுள்ளது. அக்கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அமுல்படுத்துவதற்காக Save the Children நிறுவனத்தின் மூலம் 32.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கொடையை வழங்குவதற்கு அமெரிக்க அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசால் அமுல்படுத்தப்படும் “பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தில்” குறுங்கால வளப் பற்றாக்குறையை பூர்த்தி செய்தல், பாடசாலை செல்லும் வயது பிள்ளைகளின் எழுத்தறிவை மேம்படுத்துதல், பாடசாலை மற்றும் சமூகத்துக்கான சிறந்த சுகாதாரம் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் உதவிக் கட்டமைப்பை பலப்படுத்துதல், நிலைபேற்றுத்தன்மைக்கான இயலளவு விருத்தியை நோக்காகக் கொண்டு கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொடர்புடைய தரப்பினர்களுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்ட பின்னர் குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 1974 ஆண்டின் கடலில் உயிர்பாதுகாப்பு தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 1988 நெறிமுறை மற்றும் 2003 ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட 1966 ஆண்டின் பண்டங்களின் நிறை நிரல் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 1988 நெறிமுறைக்கான அணுகல்

இலங்கை அரசினால் கடந்த 40 ஆண்டுகளாக பத்தொன்பது (19) சமுத்திர சமவாயங்கள் மற்றும் நெறிமுறைகள் ஏற்று அங்கீகரிக்கப்பட்டு சமுத்திரவியல் தேசமாக இலங்கையின் விருத்திக்காக பாரிய பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் சர்வதேச சமுத்திரவியல் அமைப்பின் சமவாயங்களுக்கு இணங்கி செயற்பட வேண்டியது கட்டாயமாவதுடன், குறித்த தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் 1974 ஆண்டின் கடலில் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 1988 நெறிமுறைகள் மற்றும் 2003 ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட 1966 ஆண்டின் பண்டங்களின் நிறை நிரல் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 1988 நெறிமுறைகளின் ஏற்பாடுகளை உள்ளடக்கும் வகையில் வணிக கப்பல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்த நெறிமுறைகளுக்கமைவான வைப்புகளுடன் உள்ளடங்;கும் ஆவணங்களை வெளி விவகார அமைச்சின் மூலம் வைப்பு செய்யப்பட்டு குறித்த நெறிமுறைகளை அணுகுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

7. மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனம் செய்தல்

இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு மாலுமிகளால் வழங்கப்படும் பங்களிப்பை கௌரவப்படுத்துவதற்காக தேசிய மாலுமிகள் தினத்தை பிரகடனம் செய்தல் பொருத்தமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்மூலம் மாலுமி தொழில் மீது ஆர்வமுள்ளவர்களை கவர்ந்திழுப்பதன் மூலம் வெளிநாட்டு செலவாணி ஈட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் மற்றும் சமுத்திரவியல் துறையின் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்பை அதிகரிப்பதற்கான இயலுமை கிடைக்கும். அதற்கமைய, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாகப் பிரகடனம் செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

8. கோதுள்ள மரமுந்திரிகை இறக்குமதி செய்தல்

இலங்கையின் வருடாந்த கோதுள்ள மரமுந்திரிகைத் தேவை 25,000 மெட்ரிக் தொன்கள் ஆகும். ஆயினும் தற்போது உள்நாட்டு ரீதியில் 12,500 மெட்ரிக் தொன்களை மட்டுமே வழங்கும் இயலுமை உள்ளது. கடந்த போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை கிடைக்காமையால் எமது நாட்டின் மரமுந்திரிகை தொழிற்துறையின் இருப்புக்கு மிகவும் பாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டுக்காக ஆகக்கூடியது 15,000 மெட்ரிக் தொன் கோதுள்ள மரமுந்திரிகை இறக்குமதி செய்வதற்கும்,பின்னர் தொடர்புடைய அமைச்சுக்களின் சிரேஸ்ட அலுவலர்களை உள்ளடக்கிய குழுவின் மூலம் தீர்மானிக்கப்படும் கோதுள்ள மரமுந்திரிகை தொகையை அடுத்துவரும் 04 ஆண்டுகளில் உள்நாட்டு மரமுந்திரிகை அறுவடை கிடைக்காத டிசம்பர் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்வதற்கும் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

9. 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு உரித்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கான முழுமையான உரிமையை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு வாடகை அறவிடுதலை கைவிட்டு, அந்த மாடி வீட்டு அலகுகளின் உரிமையை சட்ட ரீதியாக அந்த பயனாளி குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு வீடமைப்பு திட்டங்களின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு குத்தகை உறுதி, தவணை உறுதி, உரித்து மற்றும் வாடகைஆகிய அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மாதாந்தம் ரூபா 3,000/- அல்லது அதற்கு குறைவான வாடகையின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து நகர வீட்டு அலகுகளிலிருந்தும் வாடகை அறவிடுதலை கைவிடுவதற்கும், அந்த வீடுகளின் உரித்து உரிமையை அந்த குறைந்த வருமானம் பெறுவோருக்கு உரித்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. வெளிநாட்டுச் செலவாணி வரையறுத்தலை கட்டங்களாக நீக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது அமுல்படுத்தப்படும் வெளிநாட்டுச் செலவாணி உத்தரவுகளுக்கான உத்தேச திருத்தங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு அமைய எமது நாட்டின் செலுத்துகை மீதி நிலையான மட்டத்துக்கு வரும் போது கட்டங்;களாக நிர்வாக நடவடிக்கைகளை நீக்குவதற்கு இலங்கை பிணைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றதாக சில நடைமுறை வெளிநாட்டு கொடுக்கல்வாங்கல்களுக்காக இலங்கை ரூபாவை வெளிநாட்டு செலவாணியாக மாற்றம் செய்தல் தடை செய்யப்பட்டதற்கு உரிய வெளிநாட்டு செலவாணி வரையறுத்தலை தளர்த்தும் கட்டங்களாக திட்டமிடலின் கீழான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் சபையின் விதந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2017 ஆம் ஆண்டின் 12 இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 (1) பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை பிரகடனம் செய்வதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை திட்டமிடல் தொழில்நுட்பவியலாளர்களின் நிறுவனம் (கூட்டிணைக்கும்) சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேகொட அவர்களால் தனிநபர் உறுப்பினர் முன்மொழிவாக இலங்கை திட்டமிடல் தொழில்நுட்பவியலாளர்களின் நிறுவனம் (கூட்டிணைக்கும்) சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமூலம் தொடர்பாக நிலையியல் கட்டளை 52 (6) இன் ஏற்பாடுகளுக்கு அமைய அறிக்கை பெறுவதற்காக கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை விதந்துரை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 2024 ஆண்டில் தேர்தல் நடாத்துதல்

அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபா தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குரிய செலவுகளை குறித்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும் அமைச்சரவை கவனத்தில் செலுத்தியுள்ளது.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான நிதியை அரசில் நிலவும் வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில் 2025 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டியிருக்குமெனவும் அமைச்சரவையால் அவதானிக்கப்பட்டது. இருந்த போதிலும், 2025 ஆண்டில் அந்த இரண்டு தேர்தல்களையும் நடாத்துவதற்கு முன்னர் 1948 அம் ஆண்டின் 17 இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்துக்கு (393 அதிகாரம்) அமைய நிறுவப்பட்ட மற்றும் 2354/06 இலக்க 2023-10-16 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால் தொடர்புடைய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சரவை மேலும் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த விடயங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT