Friday, April 19, 2024
Home » மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் பலி

மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் பலி

- முறையற்ற வகையில் மரம் வெட்டிய ஐவருக்கு விளக்கமறியல்

by Prashahini
February 6, 2024 12:25 pm 0 comment

வெட்டப்பட்ட மரம் சாய்ந்து மற்றுமொரு மரத்தில் வீழ்ந்து பாடசாலை மாணவன் ஒருவன் மீது வீழ்ந்ததில் மாணவன் உயிழந்துள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (03) தோட்ட காணியில் இருந்த கருப்பந்தைல மரத்தை வெட்டிய போது மரம் சாய்ந்து மேலும் ஒரு மரத்தில் வீழ்ந்தவேளை, அதன் கிளையொன்று அவ்வீதியூடாக சென்ற பாடசாலை மாணவன் மீது விழுந்ததில் குறித்த மாணவன் படுகாயமடைந்தார்.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் முருகன் அஷான் என்ற மாணவனே படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி பகுதியில் வைத்து மாணவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் உடல் உடனடியாக அருகில் உள்ள நாவலப்பிட்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டு நேற்று (05) மதியம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொகலதெனிய தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நியூட்டன் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் பற்றி விரிவாக விசாரணை நடத்தி முறையற்ற வகையில் மரம் வெட்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்கள் 5 பேரும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த 5 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் – செ.தி.பெருமாள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT