Friday, March 29, 2024
Home » விழுமியங்களை உள்ளடக்கிய நற்செய்தியை பறைசாற்றுவோம்

விழுமியங்களை உள்ளடக்கிய நற்செய்தியை பறைசாற்றுவோம்

by damith
February 6, 2024 7:00 am 0 comment

தவக்காலத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாம் வாழும் தற்போதைய உலகின் நற்செய்தி அறிவிப்புப் பணி எவ்வாறு இருக்கின்றது என்பதைக் குறித்துச் சிந்திக்க இந்த பொதுக் காலத்தின் ஐந்தாம் வாரத்தில் நாம் அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் நற்செய்திக்கு சான்று பகர்பவர்கள் உலகெங்கினும் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் வருகின்றனர். ஆனாலும் அவற்றின் மத்தியிலும் இறையாட்சிக்கான நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. காரணம், இது இயேசுவுக்கான ஓர் தொடர் ஓட்டம்.

“இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்” என்றும், “ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத் 10:16-18, 28) என்றும் குறிப்பிட்டுள்ளார் இயேசு.

இன்றைய நமது நற்செய்தி அறிவிப்பு

தற்போதைய நமது நற்செய்தி அறிவிப்புப் பணி எப்படி இருக்கின்றது என்பதைக் குறித்துச் சிந்திக்கவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.

நாம் வாழும் இன்றைய உலகில் நல்ல செய்தியை காட்டிலும் கெட்ட செய்தியே அதிகம் அறிவிக்கப்படுகிறது. மற்றவர்களின் வாழ்வில் காணப்படும் நற்செயல்களை அறிவிப்பதை விட்டுவிட்டு அவர்களிடம் விளங்கும் ஒரு சில வேண்டத்தகாத குணங்கள் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்படுகின்றன.

எந்த அளவுக்கு ஒருவரின் பெயரைக் கெடுக்க முடியுமோ அல்லது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முடியுமோ அந்தளவுக்கு அத்தகைய செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இது சாதி, மதம், மொழி மற்றும் இனத்தின் பெயரால் நிகழ்ந்து வருகின்றது. குறிப்பாக, துறவற வாழ்விலும் இது அதிகம் காணப்படுவதுதான் மிகுந்த வேதனை தருகின்றது. அதற்கு முக்கியமானதொரு எடுத்துக்காட்டு ‘மொட்டைக்கடுதாசி’ கலாச்சாரம்.

இப்போது இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. திருஅவையில் முக்கியமான பொறுப்பிற்கு ஒருவர் வந்துவிடப்போகிறார் என்பதை அறிந்து அவருடைய பெயருக்கு முன்கூட்டிய பங்கம் விளைவிப்பது கூட புது வழியாகிவிட்டது. நமதாண்டவர் இயேசுவும் கூட பரிசேயர், சதுசேயர், திருச்சட்ட அறிஞர்கள், தலைமைக்குருக்கள், மூப்பர்கள் ஆகியோரிடம் காணப்பட்ட தவறுகளை நேரிடையாகக் கண்டித்தாரே தவிர அவர்களுடைய பெயரைப் பங்கப்படுத்த அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை .

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் எம்மாதிரியான நற்செய்தியை அறிவிக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம். நாம் படைக்கப்பட்டதன் நோக்கமே, கடவுளை அறிந்து அன்புசெய்து அவர் பணியாற்றவே என்பதை உணர்ந்து இயேசு வெளிப்படுத்திய விழுமியங்களை உள்ளடக்கிய நற்செய்தியை நாள்தோறும் அறிவிப்போம். அதற்குச் சான்று பகர்வோம். இவ்வருளுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்.

அருட்பணி செல்வராஜ் சூசைமாணிக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT