Friday, March 29, 2024
Home » ஓய்வுபெற்ற இந்திய உதவித்தூதுவர் நடராஜன் எழுதிய நூல் வெளியீட்டுவிழா கண்டியில்

ஓய்வுபெற்ற இந்திய உதவித்தூதுவர் நடராஜன் எழுதிய நூல் வெளியீட்டுவிழா கண்டியில்

by damith
February 6, 2024 10:49 am 0 comment

கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயம் நூற்றாண்டை நிறைவு செய்து அதனை பல்வேறு நிகழ்வுகளாகக் கொண்டாடி வரும் தருணத்தில் அங்கு இந்தியாவின் இராஜதந்திரியாகக் கடமையாற்றிய எத்தனையோ உதவித் தூதுவர்களை மலையக சமூகம் கண்டிருந்தாலும், ஏ. நடராஜன் அவர்களை கண்டி வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய அனைத்து சமூகத்தினரும் எக்காலமும் மறந்துவிடப் போவதில்லை. அனைத்து இன, மத மக்கள் மத்தியிலும் பெருமதிப்புமிக்கவராகத் திகழ்ந்தவர் அவர்.

ஏ. நடராஜன் அவர்கள் இலங்கையில் கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயங்களில் உதவித்தூதுவராகக் கடமையாற்றி விட்டு இந்தியா சென்று வாழ்ந்து வந்தாலும், அவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தின் வரலாற்றை எழுதி ஒரு நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். அது தொடர்பில் சமூகப் பணியாளர் முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்கள், நடராஜன் எழுதிய நூலை கண்டியில் வெளியிட்டு வைத்து விழா செய்வோம் என கோரிக்கை விடுத்திருந்தார். அதற்காக கண்டியில் டெவோன் ஹோட்டலில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தார். அதன் போது அந்நூல் வெளியீட்டு விழாவுக்கான விசேட ஏற்பாட்டுக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் தலைமையில் பேராசிரியர் துரை மனோகரன், கண்டி வர்த்தகப் பிரமுகர் பெ. பழனியப்பன், வர்த்தக சங்கத்தின் தலைவர் பி. குமாரதாஸ், பொருளாளர் சிவசுப்பிரமணியம், முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் பொருளாளர் அஹமட், மலையக கலை கலாசார சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ராஜ ஜெய்கின்ஸ், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. இ இராமன், இந்து இளைஞர் மன்றத் தலைவர் வைதீஸ், கண்டி முத்தமிழ் சங்கத்தின் செயலாளர் சிவகுமார், கண்டி தமிழ் சங்கத்தினர் மற்றும் இக்பால் அலி, மலையக கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதன் போது நடராஜனின் நூலை கண்டியில் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெற்றன . அவருடைய நூல் வெளியீட்டு விழா கண்டியில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

அந்நிகழ்வு தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவின் ஒருவரான மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தினகரனுக்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கண்டி மற்றும் யாழ்ப்பாண உதவி ஸ்தானிகராலயத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஏ. நடராஜன் அவர்கள் எழுதிய ‘பொரம் த விலேஜ் டு த குளோபல் ஸ்டேச்’ (அனுபவ வாழ்க்கை குறிப்பு) ஆங்கில நூல் வெளியிட்டு விழா கடந்த 03-.02-.2024 சனிக்கிழமை பி. ப. 4.00- முதல் 5.30 வரையிலும் பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு முன்னால் உள்ள பேராதனை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசனை சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.

சமூகச் செயற்பாட்டாளர் முத்தையாப் பிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்களின் வரவேற்புரையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் பற்றிய கருத்துரையினை பேராதனை பல்லைக்கழக சட்டத் துறைப் பேராசிரியர் நெலும் தீபிகா உடகம அவர்களும், நூல் பற்றிய அறிமுகவுரையினை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் பி. எஸ். அபயக்கோன் அவர்களும் ஏற்புரையினை நூலாசிரியரும் ஓய்வு பெற்ற உதவித்தூதுவருமான ஏ. நடராஜன் அவர்களும் நிகழ்த்தினார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாட்டினை கண்டி நகரிலுள்ள பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் இணைந்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி தமிழ் வர்த்தக சங்கம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், மத்திய மாகாண இந்து மாமன்றம், கண்டி இந்து இளைஞர் மன்றம், கண்டி தமிழ்ச் சங்கம், கண்டி முத்தமிழ் சங்கம், மாத்தளை மகாத்மா காந்தி சபை, மத்தளை தமிழ் இலக்கிய மன்றம், மலையக கலை கலாசார (இரத்தின தீபம்) சங்கம், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் மற்றும் அசோகா குரூப் கம்பனியின் தவிசாளர் பி.டி.ஆர். ராஜன், சன்ரயிஸ் பிஸ்கட் கம்பனியின் பணிப்பாளர் தொழிலதிபர் எஸ். முத்தையா ஆகியோர் ஒருங்கிணைந்த பங்கேற்புடன் இந்த நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாவட்டப் பாரளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார், முன்னாள் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக, முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ, தினகரன்/ தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், பேராசிரியர்களான எம். ஏ. நுஹ்மான், வ. மகேஸ்வரன், விஜயச்சந்திரன் உள்ளிட்ட இன்னும் பல முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சமூகப் பணியாளர் முத்தையாப் பிள்ளை ஸ்ரீகாந்தன் உரையாற்றும் போது “கண்டியில் இதற்கு முன்னர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவை கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கமும் தமிழ் வர்த்தக சங்கமும் இணைந்து நடத்தின. இரண்டாவதாக ஏ. நடராஜனின் புத்தக வெளியீட்டு விழாவை கண்டியிலுள்ள 10 சங்கங்கள் இணைந்து மிகவும் ஒரு ஒற்றுமையாக நடத்தியமை ஒரு முன்மாதியான விடயமாகும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது “இந்தியா நல்ல நிர்வாகத் திறமைமிக்க ராஜதந்திரிகளையும் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது. இராஜதந்திரியாக செயற்பட்டவர்கள் மிகுந்த நாட்டுப் பற்றுமிக்கவர்கள். இந்தியாவின் வெளிவிகார அமைச்சர் ஜெய்ங்கர் கூட இராஜதந்திரியாகக் கடமையாற்றியவர். இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட சிறந்த தலைவர். அந்த வகையில் நடராஜன் அவர்கள் கூட நாட்டுப்பற்றுமிக்கவராகச் சிறந்த முறையில் கடமையாற்றினார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய தலைமைத்துவங்கள் மிகவும் அவசியமாகும்.

ஒருவர் கடமையிலோ பதவிகளிலோ இருக்கின்ற காலத்தில் அவர்களுக்குப் பின்னால் சனக் கூட்டத்தினர் இயல்பாகவே இருப்பார்கள், ஆனால் அவர்கள் அதில் இருந்து ஓய்வு பெற்றால் சனக்கூட்டத்தைக் காண இயலாது. ஆனால் நடராஜன் அவர்கள் தன் கடமைகளில் போது மக்களுக்காக சேவை செய்துள்ளார். அவர் மக்களுடைய மனத்தை வென்றுள்ளார். அவர் ஓய்வு பெற்று இந்தியாவில் வாழ்ந்தாலும் இலங்கையிலுள்ள மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவருடைய அந்த தனிச்சிறப்பினைத்தான் அவருடைய இந்த நூல் வெளியீட்டு விழாவிலே மண்டபம் நிறைந்த சனக் கூட்டத்தைக் காண்கின்றோம்.

அதிகார வர்க்கம்தான் ஒருவரை ஒருவர் அடக்கி ஆள முற்படுகின்றது. மலையக சமுதாயம் 200 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினாலும் ஆரம்பத்தில் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலனித்துவ ஆட்சியாளர்கள்தான் மலையக மக்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்தார்கள்.

அந்த அதிகார வர்க்கத்தினர்கள் எப்பொழுதும் சமநிலையாக நடப்பதில்லை. இன்று பலஸ்தீனத்தில் காஸாவில் நடைபெறும் யுத்தமும் அதுவேதான்” என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஓய்வு நிலை பெற்ற உதவித்தூதுவர் ஏ. நடராஜன் ஏற்புரையாற்றும் போது “நான் பல ஆண்டுகள் தூதுவராக பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றி நூல் ஒன்றை வெளிக்கொணர்ந்துள்ளேன். எனது பள்ளிப் பருவம், இளமைக் காலப் பருவம், எனது குடும்பச் சூழ்நிலை மற்றும் இந்தியத் தூதரகங்களில் பணிபுரியும் போது சில விசித்திரமான அனுபவங்களைப் பற்றி என்னுடைய நூலில் எழுதியுள்ளேன்.

நான் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தமையினால் அங்குள்ள இந்திய மீனவர் பிரச்சினை, கச்சதீவு, போர்க்காலப் பிரச்சினைகள், இந்திய அமைதிப்படை போன்றவற்றை என்னுடைய நூலில் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

பல நாடுகளில் இத்தனை காலமும் பணிபுரிந்திருந்தாலும் மலையகத் தமிழ் மக்கள், மலையகத்திலுள்ள சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் மாதிரி குணம்படைத்த மக்களை நான் வேறு எங்கும் சந்திக்க வில்லை என்பதுதான் உண்மை. அதற்காக மற்ற நாட்டைச் சார்ந்தவர்கள் கெட்டவர்கள் என்று கூறவில்லை. ஆனால் இவ்வளவு நல்ல குணமுள்ளவர்களை நான் அவதானித்தது இலங்கையில்தான் ஆகும். அதுவும் குறிப்பாக மலையகத்தில்தான்.

நான் அவர்களிடமிருந்து நல்ல கௌரவத்தையும் நல்ல அனுபவத்தையும் பெற்றுக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT