நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன் | தினகரன்


நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த நடிகன்

கம்மான பட்டபெந்திகே தொன் ஜோன் அபேவிக்ரம என்ற  ஜோ அபேவிக்கிரம பிரபல சிங்களத் திரைப்பட நடிகராவார். இவர் 1927  ஜுன்  22ஆம் திகதி பிறந்தவர்.  இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் நடித்துப் புகழ் பெற்றார்.  

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்தவர் அபேவிக்கிரம. இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.  

இவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி, இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.  

1959இல் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' நாடகத்தை நடித்து மேடை நாடகத்துறையில் அறிமுகமான இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையில் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.  

இலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். இந்த விருது எமது லேக் ஹவுஸ் நிறுவனத்தால்  வழங்கப்பட்டு வருகின்றது. எமது லேக் ஹவுஸ் நிறுவனம்  வாராந்தம் வௌியிடும்  சினிமா  இதழ் சரசவி இதழ். இந்த சினிமா இதழ் மூலம் இந்த விருதுவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜோ அபேவிக்கிரம 11தடவைகள்  இந்த விருதைப் பெற்றுள்ளார்.  

திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும், திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக ஜனாதிபதி விருதினை இவர் 7தடவைகள் பெற்றுள்ளார்.  

1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.  

ஜோ அபேவிக்கிரம தனது 84ஆவது வயதில் 2011செப்டம்பர் 21ஆம் திகதி  காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்துள்ளார்.  உடனடியாக  களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

 


Add new comment

Or log in with...