கோட்டாவை விடுவிக்கும் உத்தரவு கிடைக்காததால் வழக்கு ஒத்திவைப்பு | தினகரன்

கோட்டாவை விடுவிக்கும் உத்தரவு கிடைக்காததால் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன் காட் (Avant Garde) வழக்கிலிருந்து விடுவிப்பது தொடர்பான வழக்கின் பிரதி கிடைக்காமை காரணமாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் 07 பேரை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடாத்திச் செல்வதற்கு, அவன்காட் மெரிடைம் சேர்விஸ் (Avant Garde Maritime Services) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூபா. 11.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும், தன்னை அதிலிருந்து விடுவிக்குமாறு தெரிவித்து மேற்கொண்ட அடிப்படை ஆட்சேபனையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது. குறித்த உத்தரவு சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த உத்தரவை வழங்கியிருந்தது.

இவ்வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (23) வரை ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...