அவன்காட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விடுவிப்பு | தினகரன்


அவன்காட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விடுவிப்பு

அவன்காட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விடுவிப்பு-Avant Garde-Gotabaya Released from the Case-CoA

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடாத்திச் செல்வதற்கு, அவன்காட் மெரிடைம் சேர்விஸ் (Avant Garde Maritime Services) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூபா. 11.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும், தன்னை அதிலிருந்து விடுவிக்குமாறு தெரிவித்து மேற்கொண்ட அடிப்படை ஆட்சேபனையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது. குறித்த உத்தரவு சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

எனவே குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் 07 பேரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டதோடு, குறித்த மனு, மேன்முறையீட்டு மன்ற நீதிபதிகளான அச்சலா வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இருவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் எழுத்து மூலமான அனுமதியின்றி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், தனது வழக்கறிஞர்கள் மூலம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தனது அடிப்படை ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்திருந்ததோடு, குறித்த மனு  மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை, அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடாத்திச் சென்ற விடயம் தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 சந்தேகநபர்களை, எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு மூவரடங்கிய நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அவன்காட் கப்பலினுள், அனுமதிப்பத்திரம் பெறாத 813 தன்னியக்க துப்பாக்கிகள் மற்றும் 2 இலட்சத்து 935 தோட்டாக்களை வைத்திருந்தமை, மற்றும் போக்குவரத்து செய்தமை உள்ளிட்ட 7,573 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரினால் அவர்கள் 13 பேருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த தினத்தில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை சாட்டப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...