சட்ட மா அதிபரின் பிணை மறுபரிசீலனை மனு ஒத்திவைப்பு | தினகரன்

சட்ட மா அதிபரின் பிணை மறுபரிசீலனை மனு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக, சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனு, எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

குறித்த மனு இன்று (23)  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது எனவும் அதனை  மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி கடந்த 18 ஆம் திகதி சட்ட மா அதிபரினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இருவரையும் கைதுசெய்யுமாறு சட்ட மாஅதிபரினால், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்ட  உத்தரவுக்கமைய சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, கடந்த ஜுலை 02 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,  நாரஹென்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அன்றையதினம் (02) கைதுசெய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த ஜூலை 09 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 


Add new comment

Or log in with...