மக்கள் மனதை புரிந்து கொள்ள திராணியற்ற அரசியல் தலைமைகள்! | தினகரன்


மக்கள் மனதை புரிந்து கொள்ள திராணியற்ற அரசியல் தலைமைகள்!

நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நடத்தப்பட்டுள்ள எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்- படியாக எந்தவொரு  செய்தியையும் மக்களுக்கு வழங்காமல், வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது       

வெறுப்பு அரசியல்தானா எக்காலமும் தொடரப் போகின்றது?  அவலத்தில் வீழ்ந்த தமிழினத்தை மீட்டெடுக்கும் சாணக்கியமான வழிவகைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கும் நாள் எப்போது?

தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முனைப்புகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் பேரவையினர் வடக்கில் மற்றுமொரு 'எழுக தமிழ்' நிகழ்வை நடத்தியுள்ளனர்.  

இதற்கு முன்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 'எழுக தமிழ்' நடத்தப்பட்டிருந்தது. இவற்றுக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனே தலைமை தாங்கியிருந்தார்.  

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் 'எழுக தமிழ்' நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு நாடு முகங்கொடுக்கவிருக்கும் சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை வழங்கும் மாநாடாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், வழமை போன்று அதே குற்றச்சாட்டுக்களை அடுக்கும் ஒன்றாகவே இதுவும் அமைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.  

வடக்கு, கிழக்கில் சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாட்டில் விக்னேஸ்வரன் அதிகம் பிரஸ்தாபித்திருந்தார். 

 சுதந்திரத்துக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த ஒற்றையாட்சி முறையில் ஆரம்பித்து தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்தும் இந்த நிலைமை நீடித்து வருகிறது.

இதனைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் இன அழிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.  

குறிப்பாக 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியுள்ள போதும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக காணாமல் போனவர்களின் உறவுகள் 900நாட்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளை வழங்காது அரசாங்கம் காலங்கடத்தி வருவதாகவும் எழுக தமிழில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 

அது மாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும், அவற்றுக்கு உரிய அழுத்தங்களை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.  

'எழுக தமிழ்' மூலம் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வலுவான செய்தியொன்றை கூற முனைவதாகவும் அவருடைய உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

 ஏற்கனவே நடத்தப்பட்ட 'எழுக தமிழ்' மக்கள் பேரணியிலும் இதற்கு சமாந்தரமான தீர்மானங்களும், பேச்சுக்களுமே இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் மற்றுமொரு 'எழுக தமிழ்' நடத்தப்பட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

 நல்லாட்சி எனக் கூறி மத்தியில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பங்களித்தவர்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்பதற்கான உரிமை உண்டென்பதை மறுத்து விட முடியாது. இருந்த போதும் தமிழ் மக்களை தொடர்ந்தும் உசுப்பேற்றித்தான் அரசியல் செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் இங்கு காணப்படுகிறது.  

எல்.ரி.ரி.ஈயினரின் காலப் பகுதியில் 'பொங்கு தமிழ்' என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் அக்காலத்தில் மக்களை உசுப்பேற்றும் வகையில் அமைந்ததுடன், குறிப்பாக அதில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் பிற்காலப் பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவுகளில் காணப்படுகின்றன. 

 இவ்வாறான பின்னணியில் வெறுமனே குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்தும் மாநாடுகளால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதே இங்கு காணப்படும் கேள்வியாகும். தமிழ் அரசியல்வாதிகள் எப்பொழுதும் எதிர்ப்பு அரசியல்தான் செய்ய வேண்டுமா? மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம்தான் எமது உரிமைகளை அடைய முடியுமா? என்ற கேள்விகளும் காணப்படுகின்றன.  

மறுபக்கத்தில் மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதனைச் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. எனினும், சாதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் அவற்றை சரியான முறையில் அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே பலருடைய கருத்தாகவிருக்கின்றது.

அரசாங்கத்தை பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சரியான நிபந்தனைகளுடன் அந்த ஆதரவுகளை வழங்கியிருந்தால் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும் என்பது மற்றுமொரு விடயம். 

 தமிழ்க் கூட்டமைப்பு மீதான பார்வை அப்படியிருக்க, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதே இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது.  

வெறுமனே இரத்தத்தைச் சூடாக்கும் குற்றச்சாட்டுகளையும், உசுப்பேற்றும் பேச்சுகளையும் நடத்தி மக்களை தொடர்ந்தும் பரபரப்பு நிலையில்தான் வைத்திருக்கப் போகின்றார்களா? இதனை விடுத்து ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களைத் தயாரித்து முடிந்தவரை அவற்றை மத்திய அரசாங்கத்துடன் போராடி நிறைவேற்றப் போகின்றார்களா? என்றகேள்வியே இங்கு காணப்படுகிறது.  

சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்கினார் என்பது வடபகுதி மக்கள் மத்தியில் இன்னமும் குழப்பமான நிலைப்பாட்டிலேயே உள்ளது. வெறுமனே மத்திய அரசாங்கம் எதனையும் செய்ய விடவில்லையெனக் குற்றஞ்சாட்டாமல் தனது அதிகார எல்லையைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை எந்தளவுக்கு நிவர்த்தி செய்தார் என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது.  

மத்திய அரசாங்கம் பல்வேறு முட்டுக்கட்டைகளை இட்டிருந்தது என்பது உண்மையாகவிருந்தாலும் முடிந்தளவு போராடி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முற்பட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் அவதானிகளின் வாதமாகவிருக்கின்றது. 

 நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் சூழ்நிலையில் நடத்தப்பட்டுள்ள இந்த 'எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காது வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. 

 மீண்டும் மீண்டும் வெறுப்பு அரசியலை மட்டும்தான் தமிழ் அரசியல் தரப்பு செய்யப் போகின்றதா அல்லது ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றை மத்தியில் போட்டியிடும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கி பேரம் பேசும் சக்தியொன்றின் ஊடாக தமிழினத்தின் துயர் துடைக்கும் புத்திசாதுரியமான அணுகுமுறைகளை முன்னெடுக்கப் போகின்றதா?  

 இதனை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காவது தீர்வு வழங்குவதாக இருக்க வேண்டும். 

அரசியல் உரிமைகளைப் பேசிப் பேசி தமிழ் அரசியல் தரப்பு பன்னெடும் காலமாக ஏராளமான உரிமைகளை கோட்டை விட்டுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் இனத்துக்கு கிடைத்த பலன்கள் எதுவுமில்லை. 

தமிழினத்துக்கு அரசியல் உரிமைகள் அவசியம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இவ்வாறு காலம் கடத்துவதால் தமிழர்கள் இழந்த உரிமைகள் ஏராளம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யுத்தத்தில் வீழ்ந்த இனமொன்று இன்னுமே அவலத்தில் இருந்து மீண்டெழவில்லை.

தமிழர்களை அவலத்தில் இருந்து கைதூக்கி விட வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தரப்புகளுக்கு உண்டு. அவர்களது ஆக்கபூர்வமான செயற்பாடுகளையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தமிழினத்தை உருவேற்றும் செயற்பாடுகள் பலனைத் தந்து விடப் போவதில்லை. மதிநுட்பமான செயற்பாடுகளே இன்று அவசியம். வீழ்ந்து போன இனத்தை மீண்டெழச் செய்வதற்கு தமிழ் அரசியல் தரப்புகளின் இன்றைய செயற்பாடுகள் பயனைத் தருமென்று நம்ப முடியாதிருக்கிறது. 

சாரங்கன்

 


Add new comment

Or log in with...