ஹிந்தியை திணிப்பதால் எதிர்விளைவே உருவெடுக்கும் | தினகரன்


ஹிந்தியை திணிப்பதால் எதிர்விளைவே உருவெடுக்கும்

இந்தியா எங்கும் எதிர்ப்பலைகள்!

குரங்குக்குக் கூட சுயமரியாதை உண்டு

இந்தியாவை இணைக்கும் மொழி ஹிந்தியாகத்தான் இருக்கும் என அமித் ஷா ட்விட்டரில் பகிர்ந்துள்ளதால் #StopHindiImposition என்னும் ஹாஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக ஹிந்தி மொழி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் திகதி ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஹிந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

ஆனால் இந்திய மொழிகளின் தினம்தான் வேண்டும் என்று தென்னிந்தியர்கள் பலர் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிந்துள்ளனர்.

 ஹிந்தி திவஸ் தினத்தன்று, தனது ட்விட்டரில் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்தியா பல மொழிகளை கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் அதே சமயம் உலகளவில் நமது நாட்டின் அடையாளமாக ஒரே மொழி இருத்தல் வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மொழி நம்மை இணைக்குமானால் அது ஹிந்தி மொழியாகதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் அதிகளவில் பேசப்படுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.இப்பேச்சுத்தான் இந்தியா எங்கும் ஹிந்தி மொழி பேசாதவர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #StopHindiImposition என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம் அதை விட்டுவிட்டு ஒரே மொழியை திணிக்க முயற்சிப்பது இந்தியாவின் அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிப்பதாகும் என பலரும் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஹாஷ்டேக் ட்ரண்டாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் பல சமயங்களில் #StopHindiImposition என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ட்விட்டர் பயனர்கள் இதனை ட்ரண்ட் ஆக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு மும்மொழிக் கொள்கை அமுலுக்கு வருவதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து ட்விட்டரில் #StopHindiImposition #TNAganistHindiImposition போன்ற ஹாஷ்டேகுகள் உலகளவில் ட்ரெண்டாகின.

அமித் ஷாவின்  கருத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

"அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்பட வேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான ஹிந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அமித் ஷா தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அமித் ஷாவின் கருத்து குறித்து முக்கியஸ்தர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'பல நாடுகள் ஒரு மொழியை வைத்துக் கொண்டு இதுதான் எங்கள் தேசிய மொழி என்று சொல்லவில்லை. சிங்கப்பூர் அப்படிச் சொல்லவில்லை. நியூசிலாந்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தால் கூட, மயோரி என்ற அந்த நாட்டின் பழங்குடி மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது.

இப்போது நீங்கள் அமெரிக்கா சென்றால் கூட உங்களுக்கு ஆங்கிலத்தோடு ஸ்பானிஸ் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். அங்கே இருக்கின்ற பூர்வகுடி மக்களுக்கு ஸ்பானிஷ்தான் தெரியும்.

அதனால் பூர்வகுடி மொழிகளுக்கும் அங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் மொழி சம்பந்தமான எந்த ஒரு ஆய்வை எடுத்துக் கொண்டாலும் இங்கே பூர்வகுடி மொழிகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய திராவிட மொழிகள்தான் இருந்தன. அப்படி என்றால் இந்த மொழிகளில் ஒன்றைத்தானே தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். அல்லது இந்த மொழிகளை கலந்து புதிய மொழியை தானே கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் திணித்து எந்த மொழியையும் பேச வைக்க முடியாது. உங்கள் மொழி உயர்வானது, எல்லா மக்களுக்கும் அது எளிதாக புரியும் என்றால் அதனை அனைவரும் விரும்பி கற்றுக் கொள்ள போகிறார்கள்.அப்புறம் எதற்காக அதனை கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சி செய்கிறீர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் திணித்து செயல்படுத்தலாம் என்றால் அதில் தோல்விதான் ஏற்படும். ஒரு மிருகக் காட்சி சாலையில் உள்ள இரண்டு குரங்களில் ஒரு குரங்குக்கு கேரட்டும், மற்றொரு குரங்குக்கு திராட்சையும் கொடுத்து பாருங்கள். கேரட் கொடுத்த குரங்கு அதனை ஏற்றுக் கொள்ளாது. குரங்கே இந்த அளவுக்கு சுயமரியாதையோடு இருக்கும் போது மனிதனிடம் அதை எதிர்பார்க்காது இருக்க முடியுமா? அனைத்து மொழிகளையும் விருப்பத்தின் பேரில் கற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்டாயப்படுத்தினால் அந்த மொழியின் மீது வெறுப்புத்தான் வருமே தவிர, வார்த்தைகள் வராது. ஹிந்தி படித்தால் எத்தனை நாட்டுக்கு நம்மால் செல்ல முடியும். தமிழ் படித்தாலாவது நான்கைந்து நாடுகளுக்கு நம்மால் செல்ல முடியும். பெரிய கதவு நமக்கு திறந்திருக்கும் போது, குட்டி கதவு ஹிந்தியை நாம் ஏன் படிக்க வேண்டும்.

ஆங்கிலம் படித்தால்தான் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியுமே? அப்புறம் எதற்கு இந்த திணிப்பு வேலை. ஒரு மொழியை அழித்து விட்டு மற்றொரு மொழியை வளர்ப்பது என்பது இயலாத காரியம்.

இவ்வாறு தமிழகத்தின் புத்திஜீவிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக ஹிந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963மே மாதம் அண்ணா ஆற்றிய உரை இது.

"ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.

ஹிந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிபூர்வமாக தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது".

இவ்வாறு அறிஞர் அண்ணா அன்று தெரிவித்து இருந்தார்.

 


Add new comment

Or log in with...