Friday, March 29, 2024
Home » செங்கடல் தாக்குதலும் அமெரிக்க நலன்களும்!

செங்கடல் தாக்குதலும் அமெரிக்க நலன்களும்!

by damith
February 6, 2024 12:23 pm 0 comment

சர்வதேச அரசியல் முறைமை கடல்களை மையப்படுத்தியே ஆதிக்கம் பெறுகின்றது. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில சாகசக்காரர் சர் வால்டர் ராலே, “கடலுக்குக் கட்டளையிடுகிறவன் வணிகத்தைக் கட்டளையிடுகிறான்; உலகத்தின் வர்த்தகத்தை யார் கட்டளையிடுகிறாரோ அவர் உலகின் செல்வங்களையும், அதன் விளைவாக உலகத்தையும் கட்டளையிடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த இலக்கினை மையப்படுத்தியே இன்று கடலை மையப்படுத்திய அரசியல் கட்டமைக்கப்படுகின்றது.

குறிப்பாக வணிகப்போக்குவரத்தை மையப்படுத்திய வழித்தடங்களை கொண்ட கடல் ஆதிக்கம் முதன்மை பெறுகின்றது. செங்கடல் மீதான சர்வதேச பிராந்திய சக்திகளின் கவனமும் கடல் வணிக வழித்தடங்களை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. மூன்று சமீபத்திய நிகழ்வுகள் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உலகளாவிய மூலோபாய கவனத்தைக் கொண்டு வந்துள்ளன.

முதலாவதாக, டிசம்பரில் இருந்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இப்பகுதி வழியாக செல்லும் உலகளாவிய கப்பல் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துகின்றது. இரண்டாவதாக, ஹவுதி அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில், அமெரிக்கா Operation Prosperity Guardian தொடங்கியது. இறுதியாக, எத்தியோப்பியா சோமாலிலாந்தின் சுய-ஆளும் பிரதேசத்துடன் அங்கீகாரத்திற்கு ஈடாக கடல் அணுகலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவை உலகளாவிய புவிசார் அரசியலுக்கு முக்கியமானவை. ஏனெனில் அவை மத்தியதரைக் கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கின்றன. 1869இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. இந்த நீர்நிலைகளின் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரிப்பதில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சூயஸ் கால்வாயின் திறப்பு தூரத்தை கிட்டத்தட்ட 40 வீதம் குறைத்தது மற்றும் வர்த்தகம் மற்றும் மக்களின் அதிக இயக்கத்தை எளிதாக்கியது.

மேற்கு ஆசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டவுடன், செங்கடல் பாதையின் மூலோபாய முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும், 17,000 கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்கின்றன. அதாவது, உலக வர்த்தகத்தில் 10வீதம் கால்வாய் வழியாக செல்கிறது. கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையைத் தவிர்த்தால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும். உலகளாவிய கப்பல் போக்குவரத்து மீதான ஹவுதி தாக்குதல்களையும் செங்கடல் பாதை வழியாக செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பை வழங்கும் செயற்பாடுகளையும் இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும்.

கடந்த டிசம்பரில், ஹவுதி தாக்குதல்களில் இருந்து செங்கடலைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு சர்வதேச இராணுவக் கூட்டணியான Operation Prosperity Guardian அமைப்பதை அமெரிக்கா அறிவித்தது. ஜனவரி 12 முதல், அமெரிக்காவும் பிரிட்டனும் யேமனில் உள்ள ஹவுதி இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவும் பிரிட்டனும் யேமன் இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்தன. பதிலடியாக, ஹவுதிகள் அனைத்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நலன்களையும் முறையான இலக்குகளாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு இவ்நலன்களின் சாத்தியமான இலக்கு செங்கடல் பகுதியில் மட்டும் இல்லாமல் வளைகுடா அரபு நாடுகளுக்கும் நீட்டிக்கப்படலாம் என்ற ஊகங்களை அதிகரித்தது.

ஹவுதிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். கப்பல்களை குறிவைப்பது யேமன் மக்கள் மீதான அவர்களின் பொறுப்புகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் ஒரு வழியாகும்.

போராட்டக்குழுவான ஹவுதிகளின் எதிர்பார்ப்பை விட, வல்லாதிக்க அரசாகிய அமெரிக்காவின் ஈடுபாட்டின் நலன் பலமானது. மேற்காசியாவில் அதிகரிக்கும் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்திற்கு பதிலீடு கொடுக்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு காணப்பட்டது. அதற்கான வாய்ப்பினை ஹவுதிகளின் செங்கடல் தாக்குதலூடாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கின்றதா என்பதுவே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகிறது. டிசம்பரில், அமெரிக்கா செங்கடல் பிராந்தியத்தில் ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்வதன் மூலம் செங்கடலின் பாதுகாப்பைப் பாதுகாக்க ஒரு சர்வதேச கூட்டணியை அமைப்பதாக அறிவித்தது. இந்த வெளிப்படையான குறிக்கோளுக்கு மறைகரமாக வெளிப்படுத்தப்படாத குறிக்கோள்கள் இருப்பதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

முதலாவது, செங்கடலில் ஹவுதி தாக்குதல்களுக்கு அதன் பதிலளிப்பதன் மூலம், உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா அப்பகுதியை இராணுவமயமாக்கியுள்ளது. 1973- ஒக்டோபர் போருக்குப் பிறகு செங்கடலின் மூலோபாய முக்கியத்துவத்தை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதன் விளைவாக, சமீபத்திய ஹவுதி தாக்குதல்கள், செங்கடலை இராணுவமயமாக்குவதற்கும், பாப் அல்-மண்டப் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், மேலும் கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கப் படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்துவதற்கும் அமெரிக்காவிற்கு ஒரு சாக்குப்போக்காக இருக்கலாம்.

இந்த மூலோபாய நடவடிக்கையானது, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் செய்தது போல், இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், அமெரிக்க செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தலாம். இந்த சூழலில், செங்கடல் விரைவில் சர்வதேச போட்டிக்கான மையப் புள்ளியாக மாறும். குறிப்பாக ஆபிரிக்காவின் முனையில் பல போட்டி நாடுகளுக்கு சொந்தமான பதினொரு இராணுவ தளங்கள் காணப்படுகின்றன. பகைமைகள் விரைவில் ஒரு சர்வதேச போராக விரிவடைந்து, செங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச வழிசெலுத்தலில் புதிய நிபந்தனைகளை விதிக்க வழிவகுக்கும்.

இரண்டாவது, இராணுவ மூலோபாய வல்லுனர்களின் கூற்றுப்படி, அமெரிக்கா வேண்டுமென்றே செங்கடலில் ஹவுதி தாக்குதல்களின் தாக்கத்தை பெரிதாக்க முயன்றது மற்றும் பாதுகாப்பு சபையின் 2722 தீர்மானத்தை ஏற்கத் தூண்டியது. இந்தத் தீர்மானம் ஜனவரி -9ஆம் திகதி ஹவுதி கட்டுப்பாட்டில் இருந்து செங்கடலில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை சரமாரியாக ஏவப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கடற்படை இடைமறித்ததைத் தொடர்ந்து, ஹவுதிகள் வணிகர் மற்றும் வணிகத்தின் மீதான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றது. இந்த தீர்மானத்தை பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. காசா மோதலுடன் தாக்குதல்களை இணைக்கும் திருத்தம் உட்பட ரஷ்ய கூட்டமைப்பின் மூன்று திருத்தங்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிராகரித்தன. தொடர்ந்து வாக்கெடுப்பினை நிரந்தர உறுப்புரிமை நாடுகளான சீன மற்றும் ரஷ்சியா புறக்கணித்திருந்தன. அமெரிக்க ஹவுதி தாக்குதலை பெரிதாக்குவதனூடாக, பாப் அல் மண்டப் பகுதி அமைப்பில் இருப்பதை நிறுவுவதில் அமெரிக்காவின் நலன் பிரதிபலிப்படுக்கப்படுகின்றது. குறிப்பாக பாப் அல் மண்டப் பகுதியில் உள்ள ஜிபூட்டியில் ஏற்கனவே சீனாவின் முதலாவது வெளியக இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் சீனாவின் செல்வாக்கு அப்பகுதியில் உயர்வாக காணப்படுகின்றது. இப்பின்னணியிலேயே சீனாவின் செல்வாக்கைக் குறைக்கவும், இந்த மூலோபாய நீரிணையில் மூலமான சீனாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் ரஷ்யாவின் பிராந்திய திறன்களைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்க பாப் அல் மண்டப் பகுதியில் தனது கவனத்தை குவித்துள்ளது.

எனவே, ஈரான் ஆதரவு போராட்டக்குழுவான ஹவுதி ஏற்படுத்தியுள்ள செங்கடல் மையப்படுத்திய அரசியலை அமெரிக்கா தனது அரசியல் அதிகார நலனுக்கு சாதகமான களமாக மாற்றி வருகின்றது. அதேவேளை செங்கடலை மையப்படுத்திய அமெரிக்காவின் இராணுவ குவிப்பு செங்கடலை கொதிநிலைக்கு நகர்த்தக்கூடிய அபாயமே நிறைந்து உள்ளது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா தமது நலன்களை ஈடேற்றிக்கொண்டிருக்கையில், அதனை மட்டுப்படுத்தும் நோக்கிலான அமெரிக்காவின் வருகை வல்லாதிக்க போட்டி நெருக்கடியை உருவாக்குகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT