மலையக மக்கள் மீட்சிக்கு எந்த கட்சியிலும் திட்டமில்லை | தினகரன்


மலையக மக்கள் மீட்சிக்கு எந்த கட்சியிலும் திட்டமில்லை

அறிவுடையோரே ஆள வேண்டும் என்றான் பி​ேளட்டோ. அறிவுடையோராக மட்டும் இல்லாது மனசாட்சி உடையோராகவும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்தை உணர்த்துவது போலவே நாட்டின் அரசியல் நடப்புகள் இருக்கின்றன.

தேசியக் கட்சிகளின் ஆதிக்கப் போட்டி பற்றியது அல்ல எமது பார்வை. ஜனநாயக நாடொன்றில் கட்சி அரசியல் என்பது இப்படித்தான் இருக்கும் ஏனெனில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதுதான் இக்கட்சிகளின் முதல் இலக்கு.

ஆனால் ஆட்சியாளர்களின் நோக்கமானது குடிமக்கள் எல்லோருக்கும் நன்மையும் இன்பமும் கிடைக்கச் செய்வதாகவே இருக்க வேண்டும் என்னும் பி​ேளட்டோவின் நப்பாசை எவ்வளவு தூரம் அர்த்தமற்றுப்  போயுள்ளது என்பதை எண்ணும் போது கவலையாக இருக்கின்றது. ஏனெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் எத்தனை தூரம் தீர்க்கமானவை என்பதை தேசியக் கட்சிகள் காலம் தாழ்த்தித்தான் ஏற்றுக் கொண்டுள்ளன.

"பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் எமக்குப் போதும்" என்று வாய்க் கிழியப் பேசியவர்கள் இன்று தமது எடுகோளை மாற்றிக் கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்களிப்புச் சிந்தனையை தமக்குச் சார்பான  ஒரே திசையில் திருப்பி விடக் கூடிய அலையடிப்பு இப்போது காணப்படவில்லை. அதற்கான பின்னி​ைலவர அரசியல் தளம் எதுவுமே தென்படவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5768090வாக்குக​ைளப் பெற்றிருந்தார். மைத்திரிபால சிறிசேன 6217162வாக்குகளை வசீகரித்துக் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து 11985252வாக்குகளைப் பெற முடிந்தது. இங்கு பௌத்த சிங்கள மக்களின் வாக்குவன்மை மஹிந்தவுக்கு கைகொடுக்கவில்லை. மாறாக சிறுபான்மை மக்களின் வாக்குகளே மைத்திரியை கரை சேர்த்தன. ஆகவே இந்தத் தேர்தலிலும் அதுவே நடக்கும் என்னும் அச்சம் தேசியக் கட்சிகளிடம் இருக்கவே செய்கின்றது.

குறிப்பாக மலையக மக்களின் வாக்குகளும் இதில் முக்கிய அம்சமாக இடம்பிடி க்கின்றன. வடக்கு,கிழக்குத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான வாக்குறுதிகளை வழங்குவதை விட மலையக மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதும் வாக்குறுதி வழங்குவதும் தேசியக் கட்சிகளுக்கு இலகுவானதும் பாதுகாப்பானதுமாக இருக்கின்றது. ஏனெனில் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுப் பொதி என்ற வார்த்தையே பௌத்த சிங்கள மேலாதிக்க போக்காளர்களுக்கு ஒவ்வாமை.

சந்திரிகா குமாரதுங்கவின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அன்று எதிர்பபுக் காட்டியது ஐ.தே.க. அதனையே பின்னர் ஐ.தே.க சொன்ன போது சீறி எழுந்தது மஹிந்த தரப்பு. இதுதான் பெரும்பான்மை அரசியல். இவற்றையெல்லாம் நன்கு புரிந்து கொண்டுதான் தமிழ் தரப்புகளில் சில தேசிய தலைமைகளிடம் சரணாகதி அடைகின்றன. அதன் மூலம் தமது சுயநல அல்லது சந்தர்ப்பவாத அரசியல் நிகழ்ச்சி நிரலை ஈடேற்றிக் கொள்கின்றன.

இன்று தேசிய ரீதியிலான வறுமை வீதம் 4.1ஆகக் காணப்படுகின்றது. இதில் மலையகத்தின் வறுமை வீதம் 8.8ஆகும். சாதாரண பொதுமகன் ஒருவரின் மாதாந்த சராசரி வருமானம் 16.377ரூபா. ஆனால் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரின் சராசரி வருமானம் 8,566ரூபா மட்டுமே. மந்த போஷணம் 21வீதமாக உச்சமடைந்துள்ளது. க.பொ.த. சாதாரண தரத்தில் தகுதி பெறுவோர் தொகை 47சத வீதம். ஆனால் உயர் கல்வி செல்வோர் வெறும் 2சதவீதம் மட்டுமே.

நாட்டில் உள்ள 14தேசிய பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் சராசரி மாணவர் தொகை வருடாந்தம் 28ஆயிரம். இதில் மலையகத்தவர் 120—150வரையானோரே அடங்குவர். இந்த புள்ளி விபரங்களை அண்மையில் பாராளுமன்றத்தில் அடுக்கியவர் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திசாநாயக்க. இன்று இவர் ஜனாதிபதி வேட்பாளர். அவரிடம் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. ஆதாரங்கள் இருக்கின்றன. வாக்கு வன்மை இருக்கின்றது. மக்களை கூட்டும் திறமை இருக்கின்றது. ஆனால் அவர் கூறும் உண்மைகளுக்கு தீர்வு ஏதும் அக்கட்சியிடம் இருக்கின்றதா?.

மலையக மக்களின் வாழ்வியலை அடியோடு புரட்டிப் போடும் வேலைத் திட்டம் எதுவும் கைவசம் உள்ளதா? இங்குதான் எல்லா தேசிய கட்சிகளையும் போல அக்கட்சியிலும் வங்குரோத்து அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதம் தலைதூக்கி நிற்கிறது. அக்கட்சியிடம் நல்ல அரசியல் யாப்பைத் தவிர உருப்படியான வேலைத் திட்டங்கள் எதுவுமே இல்லை என்கிறார் அத்துரலிய ரத்ன தேரர். ஒருவகையில் அது சரியான இனங்காணலாகவே படுகின்றது.

ஐ.தே.க.வோ, பொதுஜன பெரமுனவோ, மக்கள் விடுதலை முன்னணியோ, சிறுபான்மையின வாக்குகளை மனசாட்சிப்படி பெறத் தயாரில்லை. தந்திரோபாயமே இக்கட்சிகளின் பாதை. இது ஜனநாயக கோட்பாடு வலியுறுத்தும் சிவில் உரிமை மறுதலிப்பு. தனிப்பட்ட ஒருவரின் உரிமை சட்டப்படி அங்கீகரிக்கப்படுவதே ஜனநாயக விழுமியம். ஆட்சி செய்வோர், ஆளப்படுவோர் என்பவர்களுக்கிடையில் எவ்வித மூலாதாரமான வேற்றுமையும் இருக்கக் கூடாது. ஆள்வோரும் ஆளப்படுவோரும் ஒரே வகையான சட்டத்துக்குள் அடக்கம். நீதி நியாயத்துக்குள் முடக்கம்.

மீண்டும் பிளேட்டோவின் பார்வையை இங்கு பதிவிட வேண்டியுள்ளது. ஆளுதல் அல்ல து அரசாங்கம் என்பது பிழையற உணர்ந்த அறிவுடைமை ஒன்றையே சார்ந்து நிற்கும் என்கிறார் அவர். மக்கள் ஆட்சியில் மானுட நீதி உரிய முறையில் நிலவாது என்னும் அவரது ஐயம் இன்றைய நிலையிலும் நிதர்சனமாகவே இருக்கின்றது.

இதனாலேயே தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக எதனையும் பேசலாம் என்பது ஒரு தர்மமாகி இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியிடம் மலையக மக்களின் ஜீவாதாரம், வாழ்வியல் மேம்பாட்டுக்கான மாற்றுத் திட்டங்கள் எதுவுமே இல்லை என்பது எப்படி உண்மையோ அதே போல பொதுஜன பெரமுன, ஐ.தே. முன்னணி கட்சிகளிடமும் எந்த திட்டங்களும் இல்லை என்பது வெளிப்படை.

அப்படியானால் இக்கட்சிகளோடு பேரம் பேசலின் அடிப்படையிலேயே யாருக்கு ஆதரவு என்பது தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுவதில் நம்பகத் தன்மையே இல்லை. சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமானவை என்பதை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருப்பது ஒருபடி முன்னேற்றம்தான். ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் பௌத்த மத சார்பிலானவர் கள் அதை பலவீனமாக உள்வாங்கிக் கொள்வார்களாயின் அது இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்னும் அச்சம் பெருபான்மையின தலை​ைமகளுக்கு வருவதில் ஆச்சரியமில்லை.

இதனையே அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒரு கூற்று நிரூபணமாக்குகின்றது.

சிறுபான்மைக் கட்சியினர் தமக்கு வாக்களித்து விட்டு வந்தால் தீர்வுத் திட்டம் பற்றிப் பேசலாம் என்னும் மஹிந்தவின் தொனியில் ஒரு அச்சுறுத்தலின் சாயலும் இருக்கவே செய்கின்றது. சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் வர வாய்ப்பில்லை என்னும் ஆற்றாமையின் அடையாளமாகக் கூட இதனைப் பார்க்கலாம்.

எனினும் இது சரியான வாதமாகப் படவில்லை என்பது பலரதும் அபிப்பிராயமாகும். ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் தமது சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதில் தவறில்லை என்று கூட பொதுஜன பெரமுன கருத்துத் தெரிவித்திருந்தது. வடக்கு, கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோருக்கு தமக்கான வேட்பாளர்களை நிறுத்தும் தார்மிக உரிமை இருக்கலாம். அப்படி நிறுத்தும் பட்சத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமானவையாக அமையும் வாய்ப்பினை இழந்து போகும். இதுவே சிலரது எதிர்பார்ப்பு. இது ஒரு வகையில் தோல்விப் பயம் என்று கூறுவோரும் உளர். தமக்குக் கிடைக்காது என்ற நிலையில் வாக்குகளை திசைதிருப்புவது என்பது எதிரி பயனடைவதைத் தடுக்கும் ஓர் உத்தியே ஆகும்.

ஆனால் மலையகக் கட்சிகள் இந்த தந்திரத்துக்கு பலியாகப் போவதில்லை. அவை ஏற்கனவே ஏதாவது ஒரு கட்சியின் நிகழ்ச்சி நிரலை தமதாக்கிக் கொண்டுள்ளன. இது ஒருவகை சரணாகதி அரசியல். தனித்துவ அரசியலுக்கான வாய்ப்புகள் பலப் படுத்தப்படாமலே இருக்கின்றன.பேரம் பேசல் எல்லாம் வெறும் நாடகம்.

தேசிய கட்சிகளின் தந்திரோபாய அரசியல், மலையக கட்சிகளின் நிலைப்பாடு இவற்றுக்கிடையே மலையக வாக்காளர்களின் கருத்தியலும் சமகால நகர்வுகளின் பாதிப்பும் எப்படியிருக்கின்றன?

ஹல்தும்முல்லையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் சமூக ஆர்வலருமான கந்தசாமி நடராஜா இவ்வாறு சொல்கிறார்.                                           

'பொதுவாக அரசியலில் நாகரிகமான மாற்றம் அவசியம். அதுவே சமூகரீதியிலான அபிவிருத்திக்கு அடிகோலும். இன்று ஆதரவு ரீதியிலான அரசியல் வரப்பிரசாதங்கள், வாய்ப்புகள் பகிர்ந்தளிப்பதில் பாகுபாடு இடம்பெறுகின்றது. இதனால் மலையக வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் குன்றிப் போயுள்ளார்கள். மலையக அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்களை ஒட்டிய வெறுப்பும் அதிருப்தியும் நிலவவே செய்கின்றன. இன்றைய ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான நிலைப்பாடு வடக்கு,கிழக்கு மக்களின் யுத்தகால மனவலி மலையக மக்களின் உள்ளங்களிலும் பிரதிபலிப்பதன் அடிப்படையிலேயே உள்வாங்கப்படுவதாக உணரப்படுகின்றது. இதனைத் தீர்க்கும் வழிவகைகளை முன்னைய ஆட்சியினர் காணாதது ஒரு குறையே.'

இனி இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?                                                            

பண்டாரவளையில் தொழில் புரியும் என். குகஸ்ரீ கணேஷ்(வயது 25) கூறும் போது 'அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் பெற்றோரோடு சேர்ந்து யதார்த்தத்தை நேசிப்பவன் என்ற ரீதியில் நோக்கும்  ​போது இனவாத ரீதியிலான அரசியல் வெறுப்பை உமிழ்கிறது. வாழ்வாதாரம், வேலையில்லாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உண்மையாகவே அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும். குடும்ப ஆதிக்கம், வாரிசு அரசியல் கூடாது. இன, மொழி, மத பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும்' என்கிறார்.

தொழில்நுட்பவியலாளர் பா.சுதன்(24) கருத்துக் கூறுகையில் 'அரசியலில் ஈடுபாடு கொண்டவன் என்ற ரீதியில் நாட்டு நடப்புகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். எதேச்சதிகாரப் போக்கு நாட்டு நலனுக்கு நல்லதல்ல. சகல இன மக்களையும் சமமாக மதிக்கக் கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு சமூகத்துக்கு மட்டும் சார்பானதான அரசியல் போக்கு வரவேற்கக் கூடியதல்ல. மலையக இளைஞர்கள் இம்முறை நடைமுறையறிந்து சரியான ஒருவருக்கு வாக்களிக்கக் கூடியதாக இருக்குமென்பது எனது நம்பிக்கை' என்கிறார்.

இவ்வாறான கருத்துகளே ஜனாதிபதித் தேர்தலில் மலையகம் தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டுக்கு வர உதவ முடியும். இருந்தும் என்ன! வாக்குறுதி வழங்குபவர்கள் அதை முழுமையாக நிறைவேற்ற முன்வராத வரையில் எச்சங்களையும் சொச்சங்களையுமே மிச்சமாகக் கொண்டு ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் வாழும் ஒரு சமூகமாகவே மலையக சமூகம் இன்னும் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார் 'ஆட்சியியலின் புனிதம் மனிதத்துவத்தை மையமாகக் கொள்ளும் போதே மாண்பு பெறும்' என்று. உண்மைதான். அதிகாரத்தை மட்டுமே ஆட்சியியலின் இலக்கணமாகக் கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இது சாத்தியம்தானா?

தியத்தலாவை
பாலசுப்பிரமணியம்...


Add new comment

Or log in with...