எப்போதும் சர்ச்சை; எவ்வாறு சமாளிக்க போகிறார்? | தினகரன்


எப்போதும் சர்ச்சை; எவ்வாறு சமாளிக்க போகிறார்?

இந்தியாவில் ஹிந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லது' என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையத்தில் கூறி இருந்தார்.

"எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு பொதுமொழி ஒன்றைக் கொண்டு வர முடியாது" என்றும் ரஜினி கூறி இருந்தார்.

இது மாத்திரமன்றி இதற்கு முன்பும் ரஜினி இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துகள் பலவற்றைக் கூறியிருந்தார்.இக்கருத்துகளை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தனர்.

"சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

#MeToo விவகாரத்தில் "பெண்களுக்கு பாதுகாப்புத் தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது" என்றும் அவர் கூறியதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.

கடந்த ஓராண்டில் ரஜினி கூறியவை ஏராளம்.

"ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளைப் போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூகவிரோதிகள் நுழைந்து விட்டனர்; சமூக விரோதிகள் பொலிசாரை அடித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது" என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

''போராட்டம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஜல்லிக்கட்டில் கூட அதுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டத்தில் வெற்றி கிடைத்தாலும் இரத்தக்கரையோடு அது முடிந்திருக்கிறது" என்று கூறி இருந்தார்.

"இந்த சமூகவிரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அவ்விதத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். விஷக்கிருமிகளை மற்றும் சமூகவிரோதிகளை ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். இவ்விஷயத்தில் ஜெயலலிதாவை இப்போதைய அரசு பின்பற்ற வேண்டும். இல்லையெனில் மிகவும் ஆபத்தாகும்" என்றார் ரஜினி.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கருத்துக் கூறிய அவர், "எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்" என்றார். 

இந்த கருத்து பின்னர் சர்ச்சையானது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்தை, சந்தோஷ் என்ற இளைஞர் கோபமாக "யார் நீங்க?" என்று கேட்பார். அதற்கு ரஜினி, "நான்தான்பா ரஜினிகாந்த்" என்றார்.

"ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் கேட்டவுடன் "நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்றார்.

அந்த சமயத்தில்"நான்தான்பா ரஜினிகாந்த்" என்ற வார்த்தை ட்ரெண்டானது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாத்திடம், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது; இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், "எந்த ஏழு பேர்? அது குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன்" எனப் பதிலளித்திருந்தார்.

ரஜினிகாந்த்தின் இந்த பதில் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. பல்வேறு தரப்பினரும் இதை விமர்சனம் செய்தனர்.

ஆனால் அடுத்த நாளே, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் தொடர்பாக தமிழக அரசு அளித்த கடிதம் என்று கூறியிருந்தால், எனக்குப் புரிந்திருக்கும். அதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் விடுதலைக்காக என்று கேட்டால், 'எந்த ஏழு பேர்' என்றுதான் கேட்கத் தோன்றும். அதற்காக, அந்த ஏழு பேர் யார் என்பது தெரியாத அளவுக்கு முட்டாள் அல்ல இந்த ரஜினிகாந்த். பேரறிவாளன் பரோலில் சிறையிலிருந்து வெளியில் வந்த போது, அவருடன் 10நிமிஷங்களுக்கு மேலாக தொலைபேசி மூலம் பேசி அவருக்கு ஆறுதல் கூறியவன் நான்.

7பேரையும் விடுதலை செய்வதுதான் நல்லது" என்று செய்தியாளர்களை சந்தித்து சமாளித்தார்.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், "அனைத்து பாலினத்தவரும் சமம். சமூகத்தின் அனைத்து கூறுகளிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால், அதே நேரம் ஐதீகம் பின்பற்ற வேண்டும்" என்றார்.

"தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக திரளும் மிகப் பெரிய கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ரஜினி, "10பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்து போராடுறாங்கனா யார் பலசாலி?' என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார்.

"அப்போ, நரேந்திர மோடி பலசாலி என்று சொல்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, 'இதைவிட க்ளீயரா யாரும் பதில் சொல்ல முடியாது' என்றார்.

இவ்வாறெல்லாம் முன்னுக்குப் பின் முரணாகவும், சர்ச்சையாகவும் கருத்துகளை வெளியிடுவதே ரஜினிக்கு வழக்கமாகிப்  போயுள்ளது. அவர் எவ்வாறு அரசியலில் சமாளிக்கப் போகிறார் என்பது மக்கள் மத்தியில் பெரும் வினா!


Add new comment

Or log in with...