விக்ரம் லேண்டரின் ஆயுள் நாளை முடிவு - கை விரித்தது நாசா | தினகரன்


விக்ரம் லேண்டரின் ஆயுள் நாளை முடிவு - கை விரித்தது நாசா

தொடர்பு கொள்ள மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வி

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளை சனிக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், அதனை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவினாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான 'இஸ்ரோ' கடந்த ஜூலை 22-ஆம் திகதி விண்ணுக்கு அனுப்பியது. புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி செப்டம்பர் 2-ஆம் திகதி வெற்றிகரமாகப் பிரித்து விடப்பட்டது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ஆம் திகதி அதிகாலை 1.30மணியளவில் லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர். மிகவும் கடினமான பகுதிகளை எளிதாகத் தாண்டிய லேண்டர் விக்ரம் கடைசி சில நிமிடங்களில் நிலவின் பரப்பிலிருந்து 2.1கி.மீ. தொலைவில் வந்த போது, அதற்கும் 'இஸ்ரோ' கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதன் பின்னர் லேண்டர் விக்ரம் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தழுதழுத்த குரலில்கூறினார். பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களும் மனதை நெகிழ வைத்தன.

சந்திரயான் -2திட்டத்தை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போதுதான் இஸ்ரோவுக்கு ஆதரவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' களமிறங்கியது.

நாசா கடந்த 2009ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பிய ஓபிட்டர் ஒன்று நிலவைச் சுற்றி வருகிறது. அதன் உதவியுடன் லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்கலாம் என்று அதற்கான பணிகளில் நாசா ஈடுபட்டு வருகிறது.

லேண்டர் விக்ரம் நிலவில் ஒரு நாள்(பூமியில் 14நாட்கள்) ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பணியைத் தொடங்கிய நாசா, ஓபிட்டரின் உதவியுடன் லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது.

லேண்டர் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளை சனிக்கிழமையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஆனால், இதுவரை லேண்டர் விக்ரம் இருக்கும் நிலை குறித்து எந்தத் தகவலையும் நாசா வெளியிடவில்லை. நிலவில் இருக்கும் சூழ்நிலை காரணமாக நாசாவின் ஓபிட்டர், லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.எனவே விக்ரம் லேண்டருக்கு ஏற்பட்ட கதியை அறிந்து கொள்வதற்கான இறுதி முயற்சியும் கைகூடாமல் போயுள்ளது.

இதேவேளை விக்ரம் லேண்டர் திடீரென மாயமானதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், நிலவின் மேற்பரப்பில் அது எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...