உறுப்பினர்கள் 48; தமிழருக்காய் குரலெழுப்ப எவருமில்லை | தினகரன்


உறுப்பினர்கள் 48; தமிழருக்காய் குரலெழுப்ப எவருமில்லை

தெஹிவளை - கல்கிசை மாநகரசபை பிரிவில் அரசியல் அநாதைகளாக தமிழ் மக்கள்

தெஹிவளை–கல்கிசை மாநகர சபை பிரதேசத்தில் தமிழர்களின் இருப்பு ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்டதாகும். ஆனாலும் இப்பிரதேசத்தில் பரந்து வாழும் தமிழர்கள் அரசியல் ரீதியில் கைவிடப்பட்டவர்களாகவே உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் தெரிவை உறுதிப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் தெகிவளை–கல்கிசை மாநகரத் தமிழ் மக்களுக்கு இம்மாநகர சபையில் ஒரு பிரதிநிதித்துவமாவது இல்லாமை கவலைக்குரியது. மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 48பேர். அவர்களில் வட்டார ரீதியாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் 29பேர். தமிழர் பிரதிநிதிகள் எவரும் இல்லாதமை தமிழர்களின் தவறாகும்.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குத் தெற்கேயும், மொரட்டுவை மாநகர சபை எல்லைக்கு வடக்கேயும் தெகிவளை–கல்கிசை மாநகரம் அமைந்துள்ளது. அதன் மேற்கு எல்லையாக கடலும் கிழக்கு எல்லையாக மகரகம மாநகர சபையும் உள்ளன.  

தெகிவளை–கல்கிசை மாநகர எல்லைக்குள் பௌத்த மக்களுக்கு உள்ளதைப் போன்று தமிழர்களுக்கும் பல வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் பண்டைய இருப்பை வெளிப்படுத்தும் திருநந்தீஸ்வரம் என்ற சிவாலயம் இப்பகுதியிலுள்ள இரத்மலானையில் சிறப்பித்துக் கூறத்தக்கதாயுள்ளது. 

 தெகிவளை_ கல்கிசை மாநகர எல்லைக்குள் தெகிவளை மற்றும் இரத்மலானை ஆகிய இரு தேர்தல் தொகுதிகள் உள்ளமை போன்றே, அதே பெயர்களைக் கொண்ட இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் இயங்குகின்றன.  

இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளும் சிங்கள மொழியுடன் தமிழ்மொழிக்கும் இணைந்த சமவுரிமையுள்ள நிர்வாக செயலகப் பிரிவுகளென்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில), தேசிய மிருகக் காட்சிச் சாலை என்பனவும் இம்மாநகர சபை எல்லையிலேயே உள்ளன. காலி வீதி இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியாகும். 

இம்மாநகர சபை எல்லையிலுள்ள பிலியந்தலை கல்வி வலயத்தில் கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி, தெகிவளை தமிழ் மகாவித்தியாலயம், நுகேகொடை தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய மூன்று தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன.  

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்புகள் வரை கொண்ட இப்பாடசாலைகளில் இரத்மலானை இந்துக் கல்லூரியில் இலவசமாக இயங்கும் மாணவர் விடுதி அகில இலங்கை இந்து மாமன்றத்தால் நடத்தப்பட்டு வருவதுடன், பாடசாலையால் நிர்வகிக்கப்படும் மாணவ விடுதியொன்றும் செயற்படுகின்றது. 

தெகிவளை தமிழ் மகாவித்தியாலயத்திற்குரிய காணியின் மூன்றில் ஒரு பகுதி வெளியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் இடவசதி போதியதாயில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியை மீளப் பெற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

திருநந்தீஸ்வரம் என்ற பழம்பெரும் சிவாலயம் இரத்மலானையில் உள்ளது. 1518இல் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் போது சிதைத்து அழிக்கப்பட்ட இவ்வாலயம் இன்று மீளமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாலய வளவில் முருகன் ஆலயமொன்றுமுள்ளது. குறித்த திருநந்தீஸ்வர ஆலயம் தொடர்பில் தொட்டகமுவே இராகுலதேரர் தனது 'சகலிஹினிசந்தேசய' என்ற சிங்கள மொழியிலான காவிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

1454இல் அதாவது போர்த்துக்கேயர் இந்நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அக்காவியநூல் எழுதப்பட்டுள்ளது. அதில் சிவாலய வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளதுடன், மக்கள் விரும்பும் இனிமையான தமிழில் தோத்திரங்கள் பாடப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் சிறப்புடனும், வளத்துடனும் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்று ஆதாரம், உண்மை வெளிப்படுகின்றது. 

அதுமட்டுமல்ல, இவ்வாலயத்தை அண்டிய பகுதிகளில் நிலத்தை வேறு தேவைகளுக்காக அகழ்ந்த போது நிலத்தினடியிலிருந்து பல இந்துத் தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த தொல்பொருளியல் ஆய்வாளர் கலாநிதி செனரத் திசாநாயக்க அவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவையென்றும், சோழர் காலத்தைச் சேர்ந்தவையென்றும் உறுதிப்படுத்தியுள்ளார். 

பல நூறு ஆண்டுகள் பழைமை கொண்டதாகக் கணிக்கப்படும் தெகிவளை நெடுமால் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில், தெகிவளை ஆஞ்சநேயர் கோயில், படோவிட்ட முத்துமாரியம்மன் கோயில், கருமாரியம்மன் கோயில் என்பன குறிப்பிடத்தக்க இந்துக் கோயில்களாகும். 

இவற்றுடன் இப்பகுதியிலுள்ள சகல பௌத்த விகாரைகளிலும் இந்துத் தெய்வங்கள் வழிபாட்டிற்குரியவையாயுள்ளன. தெகிவளைச் சந்தியிலுள்ள பௌத்த விகாரைக்குள் பிரவேசிக்கும் போது அங்குள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தையும் தரிசிக்க முடிகின்றது. பௌத்த விகாரைகளில் விநாயகர், முருகன், அம்மன் ஆகிய இந்துத் தெய்வங்களை வழிபட முடிகின்றது. இங்குள்ள மங்களாராம விகாரையில் சிவபெருமானின் திருவுருவமும் வழிபாட்டிற்காக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இம்மாநகர சபை எல்லைக்குள் பரந்து வாழும் தமிழர்கள் அரசியல் ரீதியில் கைவிடப்பட்டவர்களாகவே உள்ளனர். கொழும்பு மாவட்டத் தமிழ்ப் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர் தெரிவை உறுதிப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் தெகிவளை – கல்கிசை மாநகரத் தமிழ் மக்களுக்குக் குறித்த மாநகர சபையில் ஒரு பிரதிநிதித்துவமாவது இல்லாமை கவலைக்குரியது. மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் நாற்பத்தெட்டுப் பேர். அவர்களில் வட்டார ரீதியாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் இருபத்தொன்பது பேர். தமிழர் ஒருவரையும் தெரிவு செய்யத் தக்கதாக உருவாக்கப்பட்ட வட்டாரம் ஒன்றும் அதில் அடக்கம். 

அதுமட்டுமல்ல, விகிதாசார அடிப்படையில் குறைந்தது ஐந்து தமிழர்கள் பிரதிநிதிகளாக வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அக்கறை செலுத்தாததால் தமிழருக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிட்டக் கூடியதாக இல்லை. வரையறை செய்யப்பட்ட வட்டாரத்திலிருந்து பெரும்பான்மையினத்தவர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரும் பிரதிநிதித்துவம் பெறவென்று வரையறை செய்யப்பட்ட வட்டாரத்தில், தமிழர் பிரதிநிதித்துவம் பெற முடியாது போனமைக்குத் தமிழர் தரப்பின் மெத்தனப்போக்கே காரணமாகின்றது. 

ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி வெளிப்படுத்துவது அப்பிரதேசத்திலுள்ள அரசியல் நிர்வாக அமைப்புகளில் அம்மக்கள் பெற்றுக் கொள்ளும் பிரதிநிதித்துவங்களேயாகும். தெகிவளை – கல்கிசை மாநகரசபையில் கணிசமான அளவில் தமிழர்கள் நிரந்தரமாக வாழ்ந்த போதிலும், மாநகர சபைக்கு வரி செலுத்துபவர்களாக இருந்த போதிலும் தமக்கென, தாம் சார்ந்த, தமக்காகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு பிரதிநிதித்துவமாவது இல்லாதிருப்பது அரசியல் ரீதியில் அவர்களை அனாதைகளாக்கியுள்ளது. 

மாநகர சபையால் பெற்றுக் கொள்ளக் கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகளை உரியபடி அனுபவிக்க, அச்சபையில் கேட்டுப் பெற தமிழர் பிரதிநிதிகள் எவரும் இல்லை.தமிழ் மக்களின் குறைகளைக் கண்டறிந்து எடுத்துக் கூறும் பிரதிநிதித்தவங்கள் தெகிவளை – கல்கிசை மாநகர சபையில் இல்லாமை பாரிய குறைபாடாகவேயுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று இருப்பைக் கொண்ட இப்பிரதேசத் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக இருப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

த. மனோகரன்


Add new comment

Or log in with...