கேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால் | தினகரன்


கேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால்

துரிதகதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டும்

இந்தியாவின் கேரள துறைமுகம் உருவாக்கப்பட்டால் அது இலங்கைக்கு பெரும் சவாலாக அமையக்கூடும் என்பதால் துரித கதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றம் புதன்கிழமை கூடியபோது வணிக கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். 

துரித அபிவிருத்திக்கு தனியார் துறையினரின் ஒத்துழைப்பு அவசியமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 

இலங்கையின் துறைமுகங்களை தரமுயர்த்தி அதனை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கையை நாம் கையாண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் பரிசோதனைகளை செய்துள்ளோம். விசாலப்படுத்தி பாரிய கப்பல்களை கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்று துறையடிகளின் விசாலத்தன்மை போதாமையே எமது தடுமாற்றங்களுக்கு காரணமாகும். அதேபோல் போட்டித்தன்மை கொண்ட பரிமாறல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இன்று இலங்கையில் துறைமுகங்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் கொள்கலன்கள் பரிமாற்றல் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்த வேண்டும்.  

இது தனியார் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் என்று கூறுகின்றனர். ஆனால் எமது உரிமையை நாம் வைத்துகொண்டு தனியார் துறையின் போட்டித்தன்மையை பயன்படுத்த வேண்டும். இது தனியார் மயப்படுத்தலல்ல. அரசாங்கமே இதனை வைத்துகொள்ளும் ஆனால் தனியார் துறையின் போட்டித்தன்மையை கையாள வேண்டும். வாய்ப்புக்களை கைவிடக்கூடாது. இன்று இந்தியாவின் கேரள துறைமுகம் உருவாக்கப்படுகின்றது. இது இலங்கைக்கு பாரிய போட்டியாக அமையும்.  

ஆகவே நாம் எத்தனை துறைமுகங்களை நிர்மாணித்தாலும் எமக்கு கேள்வி இல்லையென்றால் அபிவிருத்தி குறித்து சிந்திக்க முடியாது. ஆகவே நாம் இன்று இணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கப்பல் துறையில் இந்தியாவின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டும். பாரிய கப்பல்களை கொண்டுவரும் திட்டமும் கொள்கலன்களை வைக்கக்கூடிய இட வசதியையும் உருவாக்க வேண்டும். ஒலுவில் துறைமுகம் இன்று வாணிப நோக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. காலி துறைமுகத்தையும் அவ்வாறே உருவாக்கும் திட்டம் உள்ளது. இவற்றை நவீன தொழில்நுட்ப திட்டங்களுக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். அத்துடன் பரிமாற்றல் பற்றி மட்டுமே பேசாது மாற்று திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.

சுற்றுலாவுக்கான கப்பல் போக்குவரத்தையும் உருவாக்க வேண்டும். இதில் இந்தியாவின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றார்.  

நாட்டின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு

மஹிந்த அமரவீர எம்.பி 

நாட்டின் கடன் சுமை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனாளியாகின்றது. நாட்டின் உண்மையான கடன் தொகை எவ்வளவு என கணக்காளர் நாயகத்துக்கே தெரியாதாம். 

1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே திறந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அன்று தொடக்கம் இன்று வரை நாட்டின் தேசிய உற்பத்தி ஒப்பிடுகையில் வீழ்ச்சிக் கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். இதனை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள், ஆளும் தரப்பினர் மற்றும் எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளவர்களென அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

எமது நாடு தீவாக இருப்பதால் வணிகக் கப்பல்துறைக்கு சாதகம் 

ஸ்ரீநேசன் எம்.பி (த.தே.கூ) 

வணிகக் கப்பல்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானது. நாட்டிற்குள் சட்டவிரோதமான பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு இந்த சட்டம் முக்கியமானது.வேறு நாடுகளினால் தேவையற்றது என ஒதுக்கப்படும் பொருட்கள் கூட கொண்டுவரப்படும் நிலை காணப்படுகிறது. வேறு நாட்டு கழிவுகள் எடுத்துவரப்பட்ட சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. அரசியல் துறையில் இருந்து நிர்வாகத்துறை வரை இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

எமது நாடு தீவாக இருப்பதால் வணிகக் கப்பல்துறைக்கு சாதகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும். 

ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...