உயர் கல்வி அமைச்சு ஆட்சேர்ப்பு தேர்தலுக்கு முரணானதல்ல | தினகரன்


உயர் கல்வி அமைச்சு ஆட்சேர்ப்பு தேர்தலுக்கு முரணானதல்ல

நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் இடம்பெறும் ஆட்சேர்ப்பு எந்த விதத்திலும் தேர்தல் சட்டத்திற்கு முரணானது அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சபையில் தினேஷ் குணவர்தன எம் பி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது அமைச்சில் ஆயிரக்கணக்கானோருக்கு நியமனக் கடிதங்களை இன்று வழங்குவதாகவும் அது தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து எதிர்க்கட்சியை சேர்ந்த மேலும் சிலர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் சட்டங்களை மீறி செயல்படுவதாக குறிப்பிட்டனர். இதனால் சில நிமிடங்கள் சபை சர்ச்சைக்குள்ளாகியது. இது தொடர்பில் பதிலளித்த அமைச்சர், தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே மேற்படி நியமனங்களுக்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் நியமனக் கடிதம் வழங்குவது எந்த வகையிலும் தேர்தல் சட்டத்தை மீறுவதாக அமையாது.

தமது கருத்தை ஏற்றுக்கொள்ளாவிடில் அது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க முடியும் என்றார். அச் சமயம் குறிப்பிட்ட சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தற்போது நியமனங்கள் வழங்க முடியும் என்றும் வேட்புமனு தாக்கல் அறிவிப்புக்கு பின்னரே நியமனங்கள் வழங்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். மங்கள சமரவீர கூறுகையில், தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்து நமக்கு ஆச்சரியமளிக்கிறது. 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அன்றைய அரசாங்கம் அம்பாந்தோட்டை உட்பட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதை அவர் மறந்து சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,  சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...