கோபுர மோசடி தொடர்பில் குழம்புவதில் அர்த்தமில்லை | தினகரன்


கோபுர மோசடி தொடர்பில் குழம்புவதில் அர்த்தமில்லை

தவறு நடந்தால் விசாரிக்க ஒத்துழைக்க வேண்டும்

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளில் 200கோடி ரூபா மோசடி இடம்பெற்றதாக ஜனாதிபதி தெரிவித்த குற்றச்சாட்டிற்கு எதிரணியில் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டை மறுப்பதை விட அவ்வாறு தவறு நடந்திருந்தால் இதனுடன் தொடர்புள்ள சகலருக்கும் உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதாக கூறியிருந்தால் வரவேற்க முடியும் என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் கூறுகையில்,

சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கும் தாமரைக் கோபுர விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறு தொடர்பிலே ஜனாதிபதி கூறியிருந்தார். நானும் அந்த ஆட்சியில் இருந்தேன். எல்லா ஆட்சிகளிலும் தவறுகள் மோசடிகள் நடந்துள்ளன. ஆனால் அநேகமான தவறுகளுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தேடிப்பிடிக்க முடியாதுள்ளது.

இந்நிலையில் தாமரைத் தடாக மோசடி தொடர்பில் ஜனாதிபதி அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு எதிரணியில் பலரும் பதில் வழங்கியுள்ளனர். அதற்கு பதில் வழங்கக் கூடியவர்கள் மௌனமாக உள்ளனர்.

ஏனென்றால் அத் திட்டங்கள் தொடர்பிலான கொள்கை ரீதியான முடிவுகளை தான் அரசியல்வாதிகள் எடுக்கிறார்கள். ஏனைய விடயங்களை அதிகாரிகள் தான் கையாள்கின்றனர். எனவே அவர்களுக்கு இதில் பொறுப்பு உள்ளது.

இவ்வாறு மோசடி நடந்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டை மறுப்பவர்கள் கூறியிருந்தால் அதில் நியாயமுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க தயார் என்று கூறியிருக்கலாம்.

ஆனால் மோசடியை மறுப்பதை தான் சிலர் செய்துள்ளனர்.

கோப் குழுவினூடாகவும் இது பற்றி விசாரிக்கப்பட இருக்கிறது.தொலைத் தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு இது தொடர்பில் தெளிவுபடுத்தும்.எனவே வீணாக குழப்பமடையத் தேவையில்லை என்றார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...