பிறர் பார்க்க வாழாதீர் | தினகரன்


பிறர் பார்க்க வாழாதீர்

வாழ்வு உங்களுடையது  பிறர் பார்க்க  அல்லது பிறரை பார்த்து வாழ ஆரம்பித்தால் அதை தொலைத்து விடுவீர்கள். வாழ்வையும் மரணத்தையும் ஒரு சோதனைக்களத்தின் ஆரம்பமாகவும் முடிவாகவுமே அல்லாஹ் படைத்துள்ளான்.

அல்லாஹ்வை திருப்திப்படுத்துகின்ற பொழுதுகளே மனிதன் வாழுகின்றான். மனிதர்களின் திருப்தியை வெல்வதே நோக்கமாக இருப்பின் மனிதன் நிலையான நிம்மதியை தொலைத்து விடுவான்.

மனிதன் மன நோயாளியாகி விடக் கூடாது என்பதற்காகத் தான் ஆட்சி, பெருமை, மாட்சிமை, புகழ் என்பவற்றை அல்லாஹ் தனதாக்கிக் கொண்டுள்ளான்.

வாழ்வில் உண்மையான வெற்றியும் தோல்வியும் புறக் கோலங்களால் தீர்மானிக்கப் படுவதில்லை. ஆன்மீக அடித்தளம் இல்லாத வாழ்வு சரிந்து விழும் பள்ளத்தாக்கில் கட்டிய கட்டடம் போன்றது.

வாழ்வின் உண்மையான வெற்றி பொருளாதார காரணிகளால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை. வாழ்வதற்காகக்வே உழைக்கின்றோம், உழைப்பதற்காகவே நாம் வாழ்வதில்லை. பிறர் பார்க்க, அல்லது பிறரை பார்க்க நாம் வாழக் கூடாது என்பதற்காகத் தான் போட்டி பொறாமை, தற்பெருமை காழ்ப்புணர்ச்சி என இழி குணங்கள் தடுக்கப் பட்டுள்ளன.

அல்லாஹ்வின் திருப்தியில் மாத்திரமே வாழ்வின் வெற்றி இருப்பதனால் தான் அடியார்களுக்கு செய்யும் உதவி உபகாரங்களில் கூட இக்லாஸும் இறை திருப்தியும் வலியுறுத்தப்படுகிறது.

வாழ்வில் பலமும் பலவீனமும் படைத்த றப்பின் மீதுள்ள ஆழமான விசுவாசத்திலேயே தங்கி இருக்கின்றன.  அவனே எல்லா சக்திகளையும் அதிகாரங்களையும் மிகைத்தவன்.

தனியாட்களோ, குழுக்களோ, சூழ் நிலைகளோ, உங்கள் மீது திணிக்கப் படுகின்ற அரசியல் பொருளாதார சமூக கலாசார சீர்கேடுகளோ உங்கள் வாழ்வை தீர்மானிக்க அனுமதித்து வாழ்வை பறிகொடுத்து விடாதீர்கள்.

தனது தலைவிதி எப்படி இருப்பினும் அடுத்தவன் தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும் என பல தஜ்ஜால்கள் படையெடுத்துள்ளார்கள்.

அழுது கொண்டே உலகில் பிறந்த நாம் சிரித்துக் கொண்டே வாழ்விற்கு விடை கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்விடமிருந்தே நாம் வந்தோம், அவனிடமே நாம் மீளுகின்றோம்.


Add new comment

Or log in with...