மனிதனின் எதிரி | தினகரன்


மனிதனின் எதிரி

அல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதனும் ஒருவனாவான். இந்த மனித இனம் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) தம்பதியிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. அதாவது ஒரு தந்தை மற்றும் தாயிலிருந்து தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கின்றான். இதனை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா தன் அருள் மறையாம் அல் குர்ஆனின் 'அல் ஹுஜ்ராத்' என்ற அத்தியாயத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.  

'மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரை விட மேல் என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை). எனினும், உங்களில் எவர் இறையச்சமுடையவராக இருக்கின்றாரோ, அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்'.             (அல் குர்ஆன் 45:13)  

இது முற்றிலும் உண்மையானதும், தெளிவானதுமான செய்தி. ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்டுள்ள மனிதன் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் அல்லாஹ்வினால் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தும் இந்த உண்மையையும் படைப்பாளனின் சக்தியையும் உரிய ஒழுங்கில் அறிந்து புரிந்திடாத மனித இனம் தமக்குள் பல்வேறுவிதமான பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அவை எண்ணிறைந்த அளவில் காணப்படுகின்றன.  

அதாவது மதம், இனம், சாதி, நிறம், மொழி, கோத்திரம், கொள்கை, பிரதேசம் என்றபடி மாத்திரமல்லாமல் தொழிலை அடிப்படையாகக் கொண்டும் ஏழை பணக்காரன் என்ற படியும் கூட மனித இனம் பிரிந்துள்ளது. அத்தோடு நின்றுவிடாது இப்பிரிவுகளின் அடிப்படையில் தீராத கோபமும், பகைமையும், வெறுப்பும், குரோதமும் கூட வளர்ந்துள்ளன. அவற்றை நீடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.  

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பிரிவுகளதும் பிளவுகளதும் உண்மைத்தன்மையை உரிய ஒழுங்கில் அறிந்து தெரிந்திடாத காரணத்தினால் தான் மனிதனை மனிதன் எதிரியாக நோக்கும் நிலைமை உருவானது. இந்த எதிரி என்ற பார்வையோடு சண்டை சச்சரவுகளில் மாத்திரமல்லாமல் பிரிந்து நின்று யுத்தங்களிலும் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். இரத்தம் சிந்துகின்றனர். ஆளை ஆள் படுகொலை செய்கின்றனர். காயங்களுக்கும் உள்ளாக்குகின்றனர். இவை மாத்திரமல்லாமல் யுத்தத்திலோ சண்டையிலோ எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் கூட எதிரி என நோக்கி படுகொலை செய்வதோடு சொல்லண்ணா துன்புங்களுக்கும் இம்சிப்புக்களுக்கும் உள்ளாக்குகின்றனர். அத்தோடு ஒருவரது சொத்துக்களை மற்றொருவர் அழித்து சேதப்படுத்திடவும் செய்கின்றனர்.  

இவ்வாறு தம் இனத்திற்கு எதிராக போர் தொடுத்து இரத்தம் சிந்தும் பண்பும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் போக்கும், சொத்து சுகங்களை அழித்து சேதப்படுத்தும் தன்மையும் மனிதனைத் தவிர உலகில் வேறு எந்தவொரு படைப்பினத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தோடு தன் இனத்தவரையே எதிரியாக நோக்கி பகைமை, குரோதம் பாராட்டும் பண்பும் கூட மனிதனிடம் மாத்திரம் தான் உள்ளது.  

இது கவலைக்கும் வேதனைக்குமுரிய நிலைமையாகும். மனிதன் தன்னைப் பற்றியும் தன்னினத்தைப் பற்றியும் சரியான முறையில் அறிந்து தெரிந்து கொள்ளத் தவறியதே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.  

மதம், இனம், கொள்கை, கோட்பாடு, நிறம், சாதி, மொழி, ஏழை, பணக்காரன் என்றபடி என்ன தான் பிரிவுகளுக்கு உட்பட்டிருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒரே இனத்தினர் தான். அவர்கள் அனைவரதும் இரத்தமும் கண்ணீரும் ஒரே நிறம் தான். எல்லோரது அவயவங்களும் உள்ளுறுப்புக்களும் ஒரே விதமானவை தான்.  

அதாவது வெள்ளையரை விட கறுப்பருக்கு விஷேடமான உறுப்புகளோ, முஸ்லிம் அல்லாதவரை விட முஸ்லிமுக்கு தனித்துவமான உள்ளுறுப்புக்களோ கிடையாது. அதேபோன்று இன, மத, மொழி, சாதி, கோத்திரம், நிறம், பிரதேசம் என்ற அடிப்படையில் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் அவர்களது அறிவிலும் ஆற்றலிலும் திறன்களிலும் கூட வித்தியாசங்கள் கிடையாது. அவ்வாறு இருப்பதற்கான சான்றுகளும் இல்லை. எல்லோரது பசியும் சமிபாடும் ஒரே விதமானதே. அத்தோடு உயிர் வாழவென எல்லோரும் சுவாசிப்பதும் ஒரே ஒட்சிசனைத் தான். எந்தவொரு இனத்தினரும், மதத்தினரும், மொழியினரும், சாதியினரும் காபனிரொட்சைட்சை சுவாசித்து உயிர்வாழ்வதாக இல்லை.  

இவ்வாறு படைப்பின் அடிப்படையில் எல்லா வழிகளிலும் ஏற்ற தாழ்வுகள் இன்றி ஒரே விதமாகக் காணப்படும் மனிதர்கள் தான் இன, மத, மொழி, சாதி கோத்திரம், நிலம் என்ற அடிப்படையில் பிரிந்து எதிரிகளாகவும் பகைவர்களாகவும் உருவாகியுள்ளனர்.  

ஆனால் இந்நிலைக்கான காரணம் என்ன? தமது உண்மையான எதிரி யார்? தமக்குள் ஏற்பட்டிருக்கும் பிரிவுகள், பிளவுகள், பகைமை, குரோதம் என்பவற்றுக்கு அடிப்படை யார்? என்பன தொடர்பில் மனிதன் எண்ணிப் பார்க்கத் தவறியுள்ளான். அதனால் தான் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கும் பிரிவு பிளவுக்கும் அவன் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால் தம் நிலைமை குறித்து அவன் திறந்த மனதோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது அவனது உணமையான எதிரி யார்? எங்கு தவறு பிழை ஏற்பட்டிருக்கின்றது? என்பதை அறிந்து தெரிந்து செயற்படக் கூடியதாக இருக்கும்.  

அதாவது அண்டசராசரங்கள் அத்தனையையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில் மனிதனின் உண்மையானதும் மிகத் தெளிவானதுமான எதிரி யார் என்பதை மிகவும் விபரமாகக் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.  

அல்லாஹ் மலக்குகளை நோக்கி பூமியில் தன் பிரதிநிதியாக மனிதனைப் படைக்கப் போகின்றேன் என்று குறிப்பிட்டதும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையாடல்களிலும் நிகழ்வுகளிலும் ஒரு பகுதியை சூறா பகராவில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளான்.  

'அதாவது, (நபியே!) உங்கள் இறைவன் மலக்குகளை நோக்கி ‘நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) ஏற்படுத்தப் போகின்றேன்’ எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் ‘பூமியில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்த தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றோம்’ என்று கூறினார்கள். அதற்கவன் (அல்லாஹ்) ‘நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்’ எனக் கூறிவிட்டான்'.  (அல் குர்ஆன் 2:30)  

'பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக்கொடுத்து அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி (மலக்குகளே ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்’ என்று கூறினான்'.   (அல் குர்ஆன் 2:31)  

'(மலக்குகள் அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) ‘நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனுமாய் இருக்கிறாய்’ என்று கூறினார்கள்'.  (அல் குர்ஆன் 2:32)  

(பின்னர் இறைவன்) ‘ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்’ எனக்கூறினான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்த போது அவன் (மலக்குகளை நோக்கி) ‘பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா? ஆகவே நீங்கள் (ஆதமைப் பற்றி) வெளியிட்டதையும் மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்’ என்றான். (அல் குர்ஆன் 2:33)  

பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) ‘ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜுது செய்)யுங்கள்.’ எனக்கூறிய போது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜுது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.  (அல் குர்ஆன் 2:34)  

(மிகுதி அடுத்த இதழில்) 

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...