அழகினை சுமப்பதால் இளைத்த உடலை உடையவள் | தினகரன்


அழகினை சுமப்பதால் இளைத்த உடலை உடையவள்

புகழேந்தியின் இலக்கிய நயம் 

நளவெண்பா புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட அற்புதமான ஓர் இலக்கியமாகும்.

நலன் மற்றும் தமயந்தியை பாட்டுடைத் தலைவன். தலைவியாகக் கொண்டு இலக்கிய இரசனை ததும்ப வெண்பா யாப்பில் பாடப்பட்ட பாடல்களைக் கொண்டதே இந்த நளவெண்பாவாகும்.

இத்தகு நளவெண்பாவில் தமயந்தி பற்றிய வர்ணிப்பினை சற்று அதிகமான நயத்துடன் புகழேந்தியார் பாடியுள்ளார் எனலாம்.

 தமயந்தி விதர்ப்ப நாட்டின் மன்னன் வீமனின் மகள். தன் அழகினைச் சுமப்பதனால் இளைத்த உடலை உடையவள். வண்டுகள் விரும்புகின்ற கருமையான கூந்தலை கொண்டவள். வீமனது குலத்தில் பிறந்த ஒப்பற்ற அணையாத விளக்கொளி போன்றவள்.

அவளே, மன்மதனின் காதல் எனும் செல்வத்திற்கு சிறப்பான பாதுகாவலாய் அமைந்திருப்பவள்.  

இவ்வாறு சிறப்புடைய தமயந்தியின் திருமணத்தின் பொருட்டு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமயந்தியோ திருமகள் போன்ற அழகு படைத்தவள்.

அவனது பேரழகினைக் கேள்விப்பட்ட வானுலக தேவர்கள் கூட சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். அது போல மண்ணுலகத்து மன்னவர்கள் எல்லோரும் தமயந்தியின் சுயம்வர மண்டபத்தினுள் அமர்ந்திருந்தனர்.

 சுயம்வர மண்டபத்தினுள் தன் தோழியர் சூழ வந்தடைந்தாள் தமயந்தி.

அப்போது அங்கிருந்த மன்னர்களின் பார்வைகள் எல்லாம் தமயந்தியை நோக்கிப் பாய்ந்தன. அவ்வாறு மன்னர்களின் விழியாகிய பார்வை நிறைந்திருந்த அந்த சுயம்வர மண்டபத்தில் வருகை தந்த தமயந்தியை புகழேந்தி அழகுற வர்ணிக்கின்றார். அந்தப் பாடல் இது.

மன்னர் விழித் தாமரை புத்த மண்டபத்தே 

பொன்னின் மடப்பாவை போய்ப்

புக்கான் மின் நிறத்து 

செய்யதாள் வெள்ளைச் சிறை

அன்னம் செங்கமலப் 

பொய்கை வாய்ப் போவதே போன்று 

 இப் பாடலின் பொருளைக் காணுங்கள்.

சிவந்த கால்களையும் வெண்மையான சிறகுகளையும் உடைய அன்னப் பறவை செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ள நீர்த் தடாகத்தில் செல்வதைப் போல. திருமகளைப் போன்று அழகுடைய தமயந்தி அரசர்களின் கண்களாகிய தாமரை மலர்கள் மலர்ந்துள்ள சுயம்வர மண்டபத்தில் நடந்து சென்றாள் என்பது இப்பாடலின் பொருள்.

 இங்கு இழையோடும் இலக்கிய நயத்தைப் பார்த்தால்: இங்கு சுயம்வர மண்டபம் ஓர் நீர்த் தடாகமாம். சுயம்வர மண்டபத்தில் அமர்ந்திருந்த மன்னர்களின் விழிகள் எல்லாம் தாமரை மலர்களாம். சுயம்வர மண்டபத்தில் நடந்து வந்த தமயந்தி அன்னமாம். ஆகா! அருமையான ஓர் வர்ணிப்பு ?

 அதாவது மன்னர்களின் விழிகளை தாமரைகளாக உருவகித்து தமயந்தியை மென்மையான அன்னத்திற்கு உவமையாக்கி கவிநயம் புரிந்த புகழேந்திப் புலவரின் கவித்துவம் வியப்புக்குரியதே.                  

இரா. நிஷாந்தன்


Add new comment

Or log in with...