40,000 தொன் போர்தாங்கி கப்பலில் கணினிகள் திருட்டு | தினகரன்


40,000 தொன் போர்தாங்கி கப்பலில் கணினிகள் திருட்டு

 போக்குவரத்து அமைச்சர் கொச்சின் விரைவு
 பாதுகாப்பு அதிகாரிகளுடனும் ஆலோசனை
 இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சின் நவீன கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வந்த விக்ராந் கப்பலிலிருந்த கணினிகள் திருட்டுப்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்த நான்கு கணினிகளே திருடப்பட்டுள்ளன.

மிகக் கடுமையான பாதுகாப்புள்ள பகுதியில் கட்டப்படும் இந்தக் கப்பலில் பொருட்கள் களவாடப்பட்டமை இப்பணியிலிருந்த உயர் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 40 ஆயிரம் தொன் எடையுடைய நவீன போர் விமானங்கள் இக்கப்பலில் இறங்குமளவுக்கு இந்த விக்ராந் கப்பல் நிர்மாணிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பமான இதன்பணிகள் முடிவடைந்த பின்னர் 2021 இல் இக்கப்பல் இராணுவப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இதிலிருந்த கணினிகள்,ஹார்டிஸ்க் உள்ளிட்ட சில முக்கிய டிவைஸ்களும் காணாமல் போயுள்ளன.காணாமல் போன கணினிகள் மற்றும் ஹார்டிஸ்குகளில் போர் கப்பலின் வடிவமைப்பு, விமானங்கள் இறங்கும் பகுதிகள், எரிபொருள் நிரப்ப வேண்டிய இடங்கள், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளின் விபரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கணினிகள் மற்றும் ஹார்டிஸ்கு காணாமல் போனமை பற்றி கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கும், மாநில பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிற்கும் தெரிவிக்கப்பட்டது.

போர்க் கப்பலில் பொருட்கள் மாயமானது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு கப்பல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. மேலும் மாநில பொலிஸ் டி.ஜி.பி.யும் தனிப்படை அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தார்.

இது பற்றி கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது: விசாரணை தொடங்கி விட்டது, முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகே போர் கப்பலில் பொருட்கள் மாயமானது எப்படி? என்பது தெரிய வரும் என்றார்.

இதற்கிடையே மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொச்சி வருகிறார்.

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலுக்குச் சென்று அங்கு பொருட்கள் மாயமானது குறித்து விசாரணை மேற்கொள்ளும் அவர்,மேலும் கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலில் நடந்துள்ள திருட்டு 2-வது சம்பவமாகும்.

இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு நீர் மூழ்கிக் கப்பலில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தன. அதற்கு பிறகு இப்போது இத்திருட்டு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கட்டப்படும் தளத்திற்கு யாரும் எளிதில் சென்று விட முடியாது. ஊழியர்களும் பலத்த சோதனைக்கு பிறகே பணிக்கு அனுப்பப்படுவர். மேலும் கப்பலில் உள்ள பொருட்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுவதுண்டு.

இந்நிலையில் கணினிகள் களவாடப்பட்டமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


Add new comment

Or log in with...