Home » போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்!

போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்!

by damith
February 6, 2024 6:00 am 0 comment

புதிய ஆண்டின் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு நேற்று வருகை தந்ததைப் பரவலாக அவதானிக்க முடிந்தது.

இந்நாட்டு மாணவர்கள் வெவ்வேறு விதமான சவால்களுக்கு மத்தியில் இன்றைய காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அந்தச் சவால்களில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பிரதான இடத்தைப் பிடித்ததாக விளங்குகின்றது. அதன் காரணத்தினால் அந்த சவாலில் இருந்து மாணவ சமூகத்தினர் உள்ளிட்ட முழு இளம் பராயத்தினரையும் பாதுகாக்கும் வகையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றாலும் அந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாவதில் இருந்தும் போதைப்பொருள் குற்றங்களில் இருந்தும் இந்நாட்டு மாணவர்கள் உள்ளிட்ட இளம் பராயத்தினரைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இன்று நாட்டில் ஜஸ், பன்பரக், போதை மாத்திரைகள், கஞ்சா, ஹெரொய்ன் உள்ளிட்ட பலவித போதைப்பொருட்கள் காணப்படுகின்றன. அவை நாட்டுக்கும் சமூகத்திற்கும் பெரும் தலையிடியாக விளங்குகின்றன. ஆனால் இவ்வாறான ஒரு நிலை இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் காணப்படவில்லை. அக்காலப்பகுதியில் தலைநகரிலும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலும் மாத்திரம் தான் போதைப்பொருள் குற்றங்கள் காணப்பட்டன. ஆனால் இன்று நகரம், கிராமம் என்ற வேறுபாடு இன்றி நாட்டின் எல்லா இடங்களுக்கும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் வியாபித்துள்ளன.

மாணவர்கள் உள்ளிட்ட இளம் பராயத்தினரை இலக்கு வைத்து ஐஸ், பன்பராக், போதை மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படக் கூடியளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றுள்ளது. இது தொடர்பில் அவ்வப்போது புகார்களும் தெரிவிக்கப்படுகின்றன. அதேநேரம் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. அச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில் போதைப்பொருள் குற்றங்களில் இருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி முதல் ‘யுக்திய’ என்ற பெயரில் போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விஷேட வேலைத்திட்டமொன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டுள்ளன.

இத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள சிற்றுண்ணடிச்சாலைகளில் திடீர் தேடுதல்களை நடாத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள தற்போதைய சூழலில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள கடைகளில் திடீர் தேடுதல்கள் நடாத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் ஊடாக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு இந்நடவடிக்கையின் மூலம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இளம் பராயத்தினரைப் பாதுகாக்கும் நோக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பெற்றோரும் பொது மக்களும் சமூக நலன் விரும்பிகளும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதன் ஊடாக சமூக, கலாசார சீரழிவுகளில் இருந்தும் நாட்டையும் மக்களையும் விடுவிக்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT