இலண்டன் யுவதியிடம் பாலியல் சேட்டை; 15 வயது சிறுவன் கைது | தினகரன்


இலண்டன் யுவதியிடம் பாலியல் சேட்டை; 15 வயது சிறுவன் கைது

இலண்டன் யுவதியிடம் பாலியல் சேட்டை; 15 வயது சிறுவன் கைது-15 Yr Old Arrested for Misbehaving with Tourist Women

இலண்டலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயது யுவதிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்திய போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இலண்டன் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய இளம் யுவதி திருக்கடலூர் கடற்கரை ஊடாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது 15 வயது சிறுவன் தன்னை அரவணைத்து கட்டிப்பிடித்ததாகவும் தனக்கு யார் என்பது தெரியாது எனவும் நீல கலர் டீ சர்ட் அணிந்து இருந்ததாகவும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அப்பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜஸ்மின் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஐ.எம். ஹனிபா (PC59421) ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட யுவதிக்கு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி இறுதியாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை வீடியோ கோல் மூலமாக வெளிநாட்டு யுவதிக்கு காண்பித்த வேளை இச்சிறுவன் தான் பாலியல் சேட்டை செய்ததாக பொலிசாரிடம் யுவதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவனை இன்றையதினம் (19) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...