முன்னாள் படைத் தளபதிகள் இருவருக்கு கௌரவ பட்டங்கள் | தினகரன்


முன்னாள் படைத் தளபதிகள் இருவருக்கு கௌரவ பட்டங்கள்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு “அட்மிரல் ஒப் த பிலீட்” எனும் கௌரவ பட்டத்தையும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” எனும் கௌரவ பட்டத்தையும் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிக்கையின் ஊடாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட “அட்மிரல் ஒப் த பிலீட்” ஆகவும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” ஆகவும் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் 2009ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை கடற்படைத் தளபதியாக சேவையாற்றியுள்ளார்.

இரண்டு கலைமானிப் பட்டங்களை பெற்றுள்ள முதலாவது கடற்படை அதிகாரியான கரன்னாகொட ரோயல் கப்பல் போக்குவரத்து நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

கடற்படைத் தளபதியாக பதவியேற்பதற்கு முன்னர் யுத்த காலகட்டத்தில் வட கிழக்கு உள்ளிட்ட நான்கு கடற்படை கட்டளை பிரதேசங்களுக்கான கட்டளை தளபதியாக சிறப்பான சேவையாற்றிய அவர், தனது அனுபவங்களைப் பயன்படுத்தி கடற்படையின் வளர்ச்சிக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

பணியிலிருக்கும்போதே அட்மிரல் பதவியை வகித்த இலங்கையின் முதலாவது கடற்படை தளபதி இவராவார். ரணசூர, விஷிஸ்ட்ட சேவா விபூஷனய, உத்தம சேவா, பூர்ண பூமி, ரிவிரெச ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

2006ஜூன் மாதம் 12ஆம் திகதி விமானப் படையின் 12வது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற ரொஷான் குணதிலக்க 2011பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

வானூர்தி நிபுணராக நீண்டகாலம் சேவையாற்றிய ரொஷான் குணதிலக்க, இலக்கம் 03கடல் கண்காணிப்பு படையணி மற்றும் 04வது வானூர்தி படையின் கட்டளை அதிகாரியாகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.

விமானப்படையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், விமானப்படை தளபதியாக பதவி வகிக்கையில் விமானப்படையின் பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்தி வெற்றிகரமாக யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர பங்களிப்பு செய்தார்.

ரணவிக்ரம, விஷிஸ்ட்ட சேவா விபூஷனய மற்றும் உத்தம சேவா ஆகிய பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், முன்னாள் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...