காரைதீவு பிரதேச சபைக்கு ஒரு சதமேனும் ஒதுக்கவில்லை | தினகரன்


காரைதீவு பிரதேச சபைக்கு ஒரு சதமேனும் ஒதுக்கவில்லை

தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட காரைதீவுப் பிரதேசத்திற்கு உள்ளூராட்சி அமைச்சினால் ஒரு சதம் கூட ஒதுக்கப்படவில்லை.  

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் முன்னிலையில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.  

உள்ளூராட்சிஅமைச்சின் செயலாளர் திங்கட்கிழமை (16) அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கான ஒரு கூட்டத்தை நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் கூட்டியிருந்தார்.  

அக்கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் தத்தம் பிரதேச அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் பற்றி கூறினர்.  

அவ்வமயம் அங்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் பொறியியலாளர் எஸ்.கௌரிபாலன் கணக்காளர் எஸ். உதயகுமார் உதவி உள்ளூராட்சி அணையாளர் எம்.றாபி உள்ளிட்ட உயரதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.  

அவர் தொடரந்தும் பேசுகையில்:  

இப்படியான கூட்டங்களில் நாம் எமது பிரச்சினைகளை தெரிவிக்கிறோம். ஆனால் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதன் காரணமாக இன்று நாவிதன்வெளி மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் இங்கு வருகைதரவில்லை. இங்கு பேசுவதில் எவ்வித பயனுமில்லை என்பது அவர்களின் கருத்து.  

எமக்கென்று அமைச்சருமில்லை.  இருக்கின்ற அமைச்சர்கள் பெரும்பாலும் அவரவர் சமூகம் சார்ந்து தொழிற்படுகின்றனர். நாம் குரல்கொடுத்தாலும் கவனிப்பாரில்லை. பல திட்டமுன்மொழிவுகளை வழங்கியுள்ளோம். ஆனால் ஒன்றுமே எடுபடுவதில்லை. மேடைகளில் ஜனநாயகம் ஜக்கியம் நல்லிணக்கம் பற்றி முழங்குகிறார்கள்.  

காரைதீவு பிரதேசத்தில் 12தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகள். 5முஸ்லிம் பிரிவுகள் உள்ளன. ஆனால் உள்ளூராட்சி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 15மில்லியன் ரூபாவில் தமிழ்ப் பிரதேசத்திற்கென ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை. 

நகரதிட்மிடல் அமைச்சினால் ஒதுக்கப்படும் நிதியிலும் ஒருசதம் கூட எமக்குக்கிடைப்பதில்லை. எத்தனைதரம் எழுத்துமூலம் கேட்டிருக்கிறோம். அந்த அமைச்சு தனியொரு இனத்திற்கு மட்டும் வரையாறுக்கப்பட்டுள்ளதா?  

அமைச்சின் செயலாளர் நீங்கள். எம்மையும் ஒருகண்கொண்டு பாருங்கள். நாமும் இலங்கைத்தீவுக்குள்தான் வாழுகின்றோம் என்றார்.  

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...