ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு | தினகரன்


ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிப்பு; வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதித் தேர்தல் தின அறிவிப்பு; இன்று வர்த்தமானி வெளியிடப்படும்-Presidential Election Date Announced-Nov 16-Nomination on October 07

நவம்பர் 16 தேர்தல்; ஒக்டோபர் 07 வேட்புமனு கோரல்

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் திகதி மற்றும் தேர்தல் தொடர்பான வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி உள்ளிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் திகதியாகவும், ஒக்டோபர் 07 ஆம் திகதி அதற்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் திகதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியிலுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவுறுதவற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென, அரசியலமைப்பின் 31 ஆம் உறுப்புரையின் (3) ஆம் பிரிவுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தான, அரசியலமைப்பின் 104 ஆ உறுப்புரை மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவு ஆகியவற்றுக்கமைய குறித்த தேர்தல் தொடர்பான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் நாளை (19) முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை  ஏற்றுக் கொள்ளப்படும்.

வேட்புமனுக்கள் ஒக்டோபர் 07ஆம் திகதி காலை 9.00 மணியிலிருந்து மு.ப 11.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டுமென்றும் இக் காலப் பகுதிக்குள் ஒரு திகதியை அறிவிப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் தின அறிவிப்பு; இன்று வர்த்தமானி வெளியிடப்படும்-Presidential Election Date Announced-Nov 16-Nomination on October 07


Add new comment

Or log in with...