ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவது தொடர்பில் மீள் பரிசீலிக்க வேண்டும் | தினகரன்

ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவது தொடர்பில் மீள் பரிசீலிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றிய தனது தீர்மானத்தினை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

தேசிய கட்சிகளுடன் பேசி முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை வென்றெடுப்பதே சாத்தியமான செயற்பாடு என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 19வது வருட நினைவு தினத்தையொட்டி, ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த, ”பெருந்தலைவர் நினைவேந்தல்” நிகழ்வு திங்கட்கிழமை (16) ஏறாவூர் வாவிக்கரை பூங்கா அருகில் இடம்பெற்றது.

ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.கபூர்தீன் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

எதிர்வரும் ஒரு சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் சாத்தியங்கள் காணப்படுகிறது.

பெரும்பான்மை கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு, பிரச்சாரக்கூட்டங்களை நடாத்தி தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முஸ்லிம் சமூகம் சார்பில், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மக்கள் அபிப்பிராயங்களைக் கேட்டு வருகிறார்.  

முஸ்லிம் சமூகம் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை நிறுத்துவதனால், நாம் பேரம் பேசி, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத்தெரிவித்து, அவர், ஒவ்வொரு ஊர்களிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றார். இந்த விடயம் தொடர்பில் நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் கூறினேன். முஸ்லிம் சமூகம் சார்பில் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானால், சகல முஸ்லிம் கட்சிகளுடனும் முதலில் கலந்துரையாட வேண்டும் என்றேன்.  

அவ்வாறில்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் மாத்திரம் தனித்து நின்று, தனிநபராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானால் எதனையும் சாதித்துவிட முடியாது.  

குறிப்பாக மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அதிகப்படியான வாக்குகளையும், மூவின மக்களின் ஆதரவினையும் வைத்துக்கொண்டிருந்தவர். அவர் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான முடிவுகளை எடுக்கவில்லை.  

 அவர் இந்த நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியாக இருக்கவே விரும்பினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுபான்மை சமூகத்தினரை சிக்கலில் மாட்டுவதற்கு முனையவில்லை என்றார்.  

பாலமுனை விசேட நிருபர்  


Add new comment

Or log in with...