இயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை | தினகரன்

இயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருட்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சி விடும். மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த ‘வோட்டர் பில்டர்’.

பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். பெரும்பாலும் போத்தலில் அடைக்கப்பட்ட மினரல் வோட்டரைப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்பு இருந்த மிக இலகுவான சுத்திகரிப்பு முறை. இன்றைய சூழலில் நோய்களில் இருந்து தப்பிக்க தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டியது மிக அவசியம். வெந்நீரை குடித்தாலே செரிமான தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கிவிடும்.

எப்போதும் குளிர்ச்சியாக தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண் பானையில் தண்ணீரை சேமித்து வைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு.

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 02 மணி நேரம் முதல் 05 மணி நேரம் வைத்திருந்தால்,  அந்த தண்ணீரில் உள்ள மாசுப்பொருட்கள் பலவற்றையும் மண் பானை உறிஞ்சி விடும். மண் பானையே இயற்கையின் மிகச் சிறந்த வோட்டர் பில்டர்.

புதிதாக மண் பானை வாங்கும்போது, முதன் முதலில் ஊற்றும் நீரை அருந்தக்கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி அருந்தஆரம்பிக்கலாம். செம்பு குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைப்பது மூலமாக தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி,  நுண்கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தப்படுத்தலாம். நீரை கொதிக்க வைத்த பின்னர் நெல்லிக்கனிகளையும் சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊற வைத்துப் பருகலாம். தண்ணீரை சூடாக்கும்போதே  சீரகத்தை போட்டும் கொதிக்க வைக்கலாம். நெல்லி ஊறிய நீர்,  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண் சத்துகள் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும்.

மேலும்,   நன்னாரி வேர்,  ஏலம்,  அதிமதுரம் போன்றவற்றை தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து,  தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவ குணம் அதிகரிக்கும், தண்ணீருக்கு சுவையும் கூடும்.

இப்படி இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கின்றன. இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் ஆரோக்கியமாக.


Add new comment

Or log in with...