உலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி | தினகரன்


உலக தபால் தினம்; ஒக். 05 - 09 வரை கண்காட்சி

உங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெற வாய்ப்பு

145 ஆவது உலக தபால் தினத்தையொட்டியதாக தபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட முத்திரை கண்காட்சியானது - 2019 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையகத்தில் கண்காட்சியானது குறித்த தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

அத்தோடு, குறித்த கண்காட்சியுடன் இணைந்ததாக போட்டியொன்று நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, முத்திரை பிரிவு பணிப்பாளர் ஹான்ன குமார மீகம தெரிவித்துள்ளார்.  

கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக, முத்திரை சேகரிப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30 ஆம் திகதி இதற்கான இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை www.stamps.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது,011 – 2326163  எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியையொட்டிய பழைய முத்திரைகள், முதல் நாள் முத்திரை உறைகளை கொள்வனவு செய்யலாம் என்பதோடு, உங்களின் உருவம் பொருந்திய முத்திரைகளை பெறும் சேவை, தபால் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 


Add new comment

Or log in with...