அன்னை மரியாளின் தியாகத்தைக் கொண்டாடும் வியாகுல அன்னை திருவிழா | தினகரன்


அன்னை மரியாளின் தியாகத்தைக் கொண்டாடும் வியாகுல அன்னை திருவிழா

காணாமல் போவதும், ஒரு வகையில் பார்க்கப்போனால், அழகுதான். அப்படி காணாமல் போகும்போது அதுவரை வாழ்வில் நாம் கண்டும் காணாமல் ஒதுக்கிவைத்திருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.

இம்மாதம் 8, 15 ஆகிய இரு திகதிகளும் அன்னை மரியாவின் திருவிழா நாட்கள். செப்டம்பர் 8 - மரியன்னையின் பிறந்த நாள் விழா . புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவிழா. செப்டம்பர் 15 - துயருறும் அன்னை மரியாவின் திருநாள்.

நலம் தரும் அன்னை மரியாவையும், துயருறும் அன்னை மரியாவையும் எண்ணிப்பார்க்க இன்றைய உலகச்சூழல் நம்மைத் தூண்டுகிறது. நலம் தருதல், துயர் உறுதல் என்ற இரு கோணங்களில் அன்னை மரியாவின் திருநாள்கள் தொடர்ந்து வருவது நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது.

தான் எவ்வளவுதான் துயருற்றாலும் தன் குழந்தைகளுக்கு நலம் தருவதும் அவர்களது துயர் துடைப்பதும் தாய்மையின் தலை சிறந்த பண்புகள். இதை நமக்கு நினைவுறுத்தவே  இவ்விரு திருநாள்களும் ஒன்றையொன்று தொடர்ந்து வருகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நலம் தருதல், துயர் துடைத்தல் என்ற தாய்மைப் பண்புகளுக்கு எதிர்முனையில் இவ்வுலகம் இருப்பதை உணர்த்தும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிரியா மற்றும் ஏனைய நாடுகளின் அமைதிக்காக செபங்களையும் விண்ணப்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அமைதியைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் சிரியாவின் அப்பாவி மக்களையும், உலகின் பல நாட்டினரையும் இந்த ஞாயிறன்று நம் செபங்களில் சிந்தனைகளில் இறைவன் முன் மீண்டும் ஏந்தி வருவோம்.

கடந்த ஞாயிறன்று துயருறும் அன்னை மரியாவின் திருநாள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் வேதனை அனுபவித்து, சிலுவையில் தன் மகன் இறந்தபோது அன்னை மரியா சிலுவையடியில் நின்றார் என்று நற்செய்தி சொல்கிறது (யோவான் 19: 25). அந்த அன்னையின் வீரத்தைக் கொண்டாடும் திருநாள் இது.

இறந்த தன் மகன் இறுதியாக அமைதியில் உறங்கும் வண்ணம் அவரது உடலை மடியில் தாங்கி அமர்ந்திருந்த  அன்னை மரியாவின் தியாகத்தைக் கொண்டாடும் திருநாள்.

அன்னை மரியாவைப் போலவே துயரத்தின் சிகரத்தில் உறுதியுடன் நிற்கும் அன்னையரை  குறிப்பாக பல நாடுகளிலும் தினமும் தொடரும் வன்முறைகளுக்கு தம் பிள்ளைகளைப் பலிகொடுத்து பரிதவிக்கும் அன்னையரை சிறப்பாக நினைவில் கொள்வது சிறந்தது.

வெறுப்பு, வன்முறை ஆகிய கொடுமைகளால் உருக்குலைந்து உயிரற்று கிடந்த தன் மகனின் உடலை மடியில் தாங்கியிருந்தாலும் மனதில் நம்பிக்கையைத் தாங்கி அமர்ந்திருந்த துயருறும் அன்னை மரியாவின் திருநாளன்று  நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியும் பொருத்தமானதே.

லூக்கா நற்செய்தியின் 15ம் அத்தியாயத்தில்  காணப்படும் மூன்று உவமைகள்  நற்செய்தியாக வழங்கப்பட்டன. காணாமற்போனவை கண்டுபிடிக்கப்பட்டதால் உருவான மகிழ்வைப் பறைசாற்றும் உவமைகள் இவை.

லூக்கா நற்செய்தியின் "நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி" என்று அழைக்கப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், காணாமற்போன மகன் என்ற இந்த மூன்று உவமைகளில் காணாமற்போன மகன் உவமை  உலகப் புகழ்பெற்ற உவமை.

திருந்திவந்த மகன், அவரை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவரைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தை என்று  இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் கவனம் அதிகமாகிறது. இளைய மகனைப்பற்றி சிந்திப்போம். மனம்மாறி திரும்பி வந்ததால்,  கண்டுபிடிக்கப்பட்ட மகனைவிட, காணாமல் போன மகனைப்பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம்.

பல நாடுகளில் போர்ச் சூழல்களாலும் வேறுபல வேதனைகளாலும் தங்கள் வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தையும் தங்கள் உறவுகளையும் தொலைத்துவிட்டு வேதனையுறும் மக்களை முன்னிறுத்தி காணாமல் போவது அல்லது  தொலைந்து போவதைக் குறித்துச் சிந்திப்போம்.

காணாமல் போவதன் வழியாக பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும் முற்றிலும் நொறுங்கிவிடும் நிலைகள் நிரந்தர முடிவுகள் அல்ல. அந்த இருள், அல்லது நொறுங்குதல் புதிய வழிகளையும் புதிய ஒளியையும் உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற காணாமல் போவதும் உதவி செய்யும்.  செப்டம்பர் 5ம் திகதி புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளைக் கொண்டாடினோம். அந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை. மதம் இல்லை. மொழி இல்லை. அவ்வளவு உயர்ந்த இடத்தை இந்தப் புனிதர் மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைப்பற்றி சிந்திக்கும் இவ்வேளையில் அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை அதிகம் அதிகம்.  உயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள் குழப்பங்களால் அலைக்கழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். ஆனால் நிதானமாய் ஆழமாய்ச் சிந்தித்தால் அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள், ஆகியவற்றைச் சமாளித்திருக்கமுடியும் என்பது விளங்கும்.

அதிலும் சிறப்பாக அன்னை செய்துவந்த பணியில், இந்த உலகத்தின்மீது நம்பிக்கையைக் குறைக்கும் துன்ப நிகழ்வுகளையே ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால் அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் சூழ்ந்தது இயற்கைதானே.

இருள், துயரம், கலக்கம் ஆகியவற்றைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்நேரங்களில் நம்மில் பலர் அந்த இருளுக்குள் நம்மையேப் புதைத்துக் கொள்கிறோம். ஒரு சிலர் தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும் வெளி உலகை ஒளி மயமாக்கினர். புனித அன்னை தெரேசாவைப் போல்.

நமது இன்றைய உவமையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே பசியில் மயங்கிய இளையமகன், பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல் பன்றிகள்தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல் "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்" (லூக்கா 15: 17---19) என்று எழுந்தாரே. அந்நேரத்தில் காணாமற் போயிருந்த தன் வாழ்வை அவர் மீண்டும் கண்டெடுத்தார்.

காணாமல் போவதும் ஒரு வகையில் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது அதுவரை வாழ்வில் நாம் கண்டும் காணாமல் ஒதுக்கிவைத்திருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.

சிலுவையில் அறையுண்டிருந்த இயேசு தன் தந்தையைத் தொலைத்துவிட்டதைப் போல் உணர்ந்தார். தானும் காணாமற் போய்விட்டதைப் போல் உணர்ந்தார். இருப்பினும் இறுதியில் அந்த இறைவனை மீண்டும் கண்டுபிடித்து அவர் கரங்களில் தன் உயிரை ஒப்படைத்தார்.  துயருறும் அன்னை மரியா தன் மகன் அந்தச் சிலுவையில் தன்னையேத் தொலைத்துவிட்டு கதறிய அவலக்குரலை கேட்டிருப்பார். அவர் தன் மகனுக்காக இறைவனிடம் மன்றாடியிருப்பார்.

அந்த அன்னையின் பரிந்துரை வழியாக பல நாடுகளிலும் தங்கள் உடமைகள், உறவுகள், அமைதி என்று அனைத்தையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கும் கோடான கோடி மக்கள் தாம் தேடும் அமைதியைப் பெறவேண்டும் என்பதே எமது செபமாக அமையட்டும். 

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...