Home » சத்ரானின் சதத்துடன் ஆப்கான் அணி 2ஆவது இன்னிங்ஸில் ஸ்திர ஆட்டம்

சத்ரானின் சதத்துடன் ஆப்கான் அணி 2ஆவது இன்னிங்ஸில் ஸ்திர ஆட்டம்

- இன்று போட்டியின் நான்காவது நாள்

by Rizwan Segu Mohideen
February 5, 2024 9:28 am 0 comment

இப்ராஹிம் சத்ரானின் கன்னி சதத்தின் உதவியோடு இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி மூன்றாவது நாள் அட்ட நேர முடிவின்போது ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (04) ஆப்கான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 241 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையிலேயே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இதன்போது நிதானமாக துடுப்பெடுத்தாடி ஆப்கான் ஆரம்ப வீரர்கள் 106 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். நூர் அலி சத்ரான் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் அசித்த பெர்னாண்டோவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

எனினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய இப்ராஹிம் சத்ரான் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய தினம் ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்த அவர் 217 பந்துகளில் 11 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் ரஹ்மத் ஷாவுடன் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 93 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.

ஆப்கான் அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 75 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை பெற்றது. இதன்படி அந்த அணி தொடர்ந்து 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு இன்னும் 42 ஓட்டங்களையே பெறவேண்டி உள்ளது.

முன்னதாக ஆப்கான் அணி முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களையே பெற்றதோடு அஞ்சலோ மத்தியூஸ் (141) மற்றும் தினேஷ் சந்திமால் (101) ஆகியோரின் சதத்தின் உதவியோடு இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்களை பெற்றது.

இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT