சந்தேகநபர்களை தப்ப விட்ட 8 பொலிஸார் பணி நீக்கம் | தினகரன்


சந்தேகநபர்களை தப்ப விட்ட 8 பொலிஸார் பணி நீக்கம்

சிலாபம் பிரிவிலுள்ள சிலாபம் பொலிஸ் தலைமையகத்தில் பணியிலுள்ள குறித்த பிரதேசத்துக்கான குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸார் 08 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேசத்துக்கான குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஐவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய 08 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய கடந்த 06 ஆம் திகதி வென்னப்புவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இடத்தில் இருந்த 20 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்களில் 09 பேர் மாத்திரமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய சந்தேகநபர்கள் விடுவித்தமை, சூதாட்ட களத்தில் இருந்த பணம் மற்றும் சந்தேகநபர்களின் வசமிருந்த பணத்தைமுறைகேடாகப் பெற்றமை உள்ளிட்ட விடயங்கள் தெரியவந்துள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் நாத்தாண்டியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

 

 


Add new comment

Or log in with...