Friday, April 19, 2024
Home » பொருளாதார மேம்பாட்டுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

பொருளாதார மேம்பாட்டுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

by damith
February 5, 2024 9:51 am 0 comment

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக விளங்கும் தாய்லாந்துடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கை கடந்த சனியன்று கொழும்பில் கைச்சாத்தாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவீசின் ஆகியோர் முன்னிலையில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தம் வெச்சயச்சாயும் இலங்கையின் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவும் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்குபற்றிய தாய்லாந்து பிரதமர் இலங்கையின் 76 ஆவது சுதந்திரதின வைபவத்தில் சிறப்பதிதியாகவும் கலந்து கொண்டார்.

இலங்கையும் தாய்லாந்தும் கையெழுத்திட்டிருக்கும் இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவும் வர்த்தக, பொருளாதார உறவுகளும் மேலும் மேம்பாடு அடையும்.

இலங்கையானது இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் ஏற்கனவே கையெழுத்திட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது தாய்லாந்துடன் இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. தாய்லாந்தானது ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகும். 2021 இல் தாய்லாந்து நாட்டு நிறுவனங்கள் 17.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்து ஆசியான் அமைப்பிலேயே மிகப்பெரிய முதலீட்டு நாடாகவும் விளங்கியது. அத்தோடு 2022 இல் ஆசியான் அமைப்பு நாடுகளில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்திற்கு உரிமை கொண்ட நாடாகவும் திகழ்ந்தது தாய்லாந்து.

மேலும் தாய்லாந்தானது இலங்கையைப் போன்று தேரவாத பௌத்த நாடுகளில் ஒன்றாகும். இந்த வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நட்புறவு மேலும் மேம்படவும் பொருளாதார வர்த்தக உறவுகள் வலுப் பெறவும் வழிவகுக்கும். அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கவும் முடியாது.

தற்போது இலங்கையின் 37 ஆவது ஏற்றுமதி நாடாக தாய்லாந்து உள்ளது. இந்த உடன்படிக்கை இந்நிலையை மேலும் முன்னோக்கிக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் 58.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை தாய்லாந்துக்கு இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. அதேநேரம் 2005 முதல் 2022 காலப்பகுதியில் இலங்கையில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட நிதியை தாய்லாந்து நேரடி முதலீடாக மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் சந்தை ஊக்குவிப்புக்கான சாதக நிலைமையே தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. இந்த ஒப்பந்தமானது, பொருட்கள் வர்த்தகம், வர்த்தக சட்ட அனுமதி, சுகாதார மற்றும் மூலிகை சுகாதார செயன்முறைகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள், வர்த்தகத் தீர்வுகள், சேவை வர்த்தகம், முதலீடுகள், சுங்கச் செயற்பாடுகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துக்களின் உரிமம், அடிப்படை ஏற்பாடுகள், நிறுவன மற்றும் இறுதி செய்யப்பட்ட ஒதுக்கீடுகள், வெளிப்படைத் தன்மை மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட துறைகளை உள்வாங்கும் வகையில் 14 அத்தியாயங்களுடன் கூடிய விரிவான 09 சுற்றுகளில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையின் ஊடாக இருபக்க வர்த்தக உறவு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் வளர்ச்சியடைவதோடு, பலமடையவும் செய்யும். இலங்கை 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்டுள்ள அதேநேரம், தாய்லாந்து 71.6 மில்லியன் மக்கள் தொகைமிக்க நாடாக விளங்குகிறது.

அதனால் இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இலங்கை நிச்சயம் அதிக நன்மைகள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கட்டம்கட்டமாக மீட்சி பெற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் மறுமலர்ச்சிப் பாதையில் நாடு பிரவேசித்துள்ள சூழலில், இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. அதனால் இந்நாட்டின் உற்பத்திகளுக்கு தாய்லாந்தில் கிடைக்கப்பெறும் சந்தை வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். இதன் ஊடாக தாய்லாந்து நாட்டுக்கான ஏற்றுமதிகள் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நியச் செலாவணியும் மேலும் அதிகரிக்கும். இது இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் பங்களிக்கும் என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT