பதில் நடவடிக்கைக்கு சவூதி உறுதி: அமெரிக்கா ஈரான் மீது குற்றச்சாட்டு | தினகரன்

பதில் நடவடிக்கைக்கு சவூதி உறுதி: அமெரிக்கா ஈரான் மீது குற்றச்சாட்டு

சவூதி எண்ணெய் நிலைகள் மீது தாக்குதல்:

எண்ணெய் விலை உயர வாய்ப்பு

யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கை எடுக்கும் தயாருடனும் திறனுடனும் தமது நாடு இருப்பதாக சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த பயங்கரவாத ஆக்கிரமிப்பை கையாள்வதற்கும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சவூதி தயாராகவும் திறனுடனும் உள்ளது” என்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது டிரம்பிடம் முஹமது பின் சல்மான் கூறியதாக சவூதி பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சவூதி அரம்கோ எண்ணெய் நிலைகள் இரண்டின் மீது கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல், பாரிய தீயை ஏற்படுத்தியதோடு சர்வதேச எரிபொருள் விநியோகத்திலும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து சவூதியின் பாதுகாப்பு குறித்து ஒத்துழைப்புடன் செயற்பட அமெரிக்கா தனது தயார் நிலையை முடிக்குரிய இளவரசரிடம் குறிப்பிட்டதாக அமெரிக்காவுக்கான சவூதி தூதரகம் தெரிவித்துள்ளது.

முடிக்குரிய இளவரசரை தொலைபேசியில் அழைத்த டிரம்ப், இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் சர்வதேச பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக டிரம்ப் குறிப்பிட்டதாக சவூதி செய்தி நிறுவனம் அரபு மொழியிலான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015 தொடக்கம் யெமன் உள்நாட்டு யுத்தத்தில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி தலைமையிலான கூட்டணி ஒன்றுடன் சண்டையிட்டு வருகின்றனர். 10 ஆளில்லா விமானங்கள் தொடர்புபட்ட இந்த தாக்குதலில் பிரதான எண்ணெய் வயல் ஒன்றான குரையிஸ் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்கைக்கிலேயே தீ ஏற்பட்டுள்ளது.

உள்ளுர் நேரப்படி சனிக்கிழமை காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தற்போது நிலை கட்டுக்குள் வந்துவிட்டதாக அரம்கோவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரட்டில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான யாயா சரியாவில் பேசிய ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர், “எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

மேலும், சவூதி அரேபியாவுக்குள் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், “சவூதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு நிலைகள் மீதான தாக்குதல் காரணமாக சவூதியின் மசகு எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு சுமார் 5.7 மில்லியன் பீப்பாய்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் 50 வீதமாகும்.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7 வீத பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலிலேயே உலக அளவில் உற்பத்தியாகும் மசகு எண்ணெய்யில் 1 வீதம் கிடைக்கிறது.

சவூதி அரேபியாவில் உலகிற்குத் தேவையான 10 வீத மசகு எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல் கொய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சவூதி பாதுகாப்பு படைகள் முறியடித்திருந்தன.

சவூதி விமானப் படை மற்றும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை அண்மைய ஆண்டுகளாக யெமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ ஈரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது யெமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற இராணுவப் படை யெமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளிக்கிறது.

“முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் செயல்பட்டு உலக ஆற்றல் விநியோகம் தடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும், இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார் பொம்பியோ.

எனினும் தனது கூற்றுக்கான எந்த ஆதாரத்தையும் பொம்பியோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் ஈரான், இது புரிந்துகொள்ள முடியாத, அர்த்தமற்றது என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ஈரான் அரசின் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் யெமன் அரசுக்கும், சவூதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.

யெமன் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி, ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தலைநகர் சனாவில் இருந்து தப்பிச் செல்ல நேர்ந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது.

சவூதி அரசு யெமன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கிறது. மேலும் அந்த பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து கூட்டணிப் படைக்குத் தலைமை ஏற்று ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

 


Add new comment

Or log in with...