அதிக அரைச்சதங்கள் பெற்று சங்காவை பின்தள்ளிய ஸ்மித் | தினகரன்


அதிக அரைச்சதங்கள் பெற்று சங்காவை பின்தள்ளிய ஸ்மித்

இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி 294 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.

ஆர்ச்சர் மற்றும் சாம் குர்ரனின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலியா 225 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளையும், சாம் குர்ரன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

லபுசாக்னே 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஏனைய வீரர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இந்த தொடரில் சதம், அரைசதம் என தொடர்ந்து விளாசி வரும் ஸ்டீவன் ஸ்மித் இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்.

அவர் 145 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்கின் உலக சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக இன்சமாம் 9 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஸ்மித் 10 அரைசதங்கள் அடித்து அதனை முறியடித்துள்ளார். மேலும், ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில், மேற்கிந்திய தீவுகளின் கிளைவ் லொயிட், தென் ஆபிரிக்காவின் ஜக்கஸ் காலிஸ், இலங்கையின் சங்கக்கார ஆகியோர் 8 அரைச்சதங்களுடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...