கலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு

போதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்பு

கல்கிரியாகம - கலாகம, பலளுவெவ குளக்கரைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (14) ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து கலாவெவ தேசிய பூங்காவை தற்காலிகமாக மூடிவிடுவதற்குத் தீர்மானித்ததாக கல்கிரியாகம வனஜீவி மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரி டீ.ராமசிங்ஹ தெரிவித்தார்.  இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பிரதேச பிரபல அரசியல் வாதியொருவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் மூவர் கொண்ட கும்பலொன்று மதுபோதையில் தேசிய பூங்காவினுள் அத்துமீறிப் பிரவேசித்ததுடன், அப் பிரதேசத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்த சுமார் நூறு (100) காட்டு யானைகளைக் கொண்ட கூட்டத்தின் மீது அக் கும்பல் யானை வெடிகளை கொளுத்தி எறிந்து அவற்றை அங்கிருந்து துரத்தியுள்ளனர். 

இதன் போது காட்டு யானைகளைக் காண்பதற்கான அனுமதிப் பத்திரங்கள் சகிதம் அங்கு 07 வாகனங்களில் வருகை தந்திருந்த உள் நாட்டு சுற்றுலாப் பயணிகளை கெட்டவார்த்தைகளால் ஏசி அச்சுறுத்தி துரத்தியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அக் கும்பலுக்கும் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து கலாவெவ தேசிய பூங்காவை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு வனஜீவராசிகள் அதிகாரி ராமசிங்ஹ தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும் 12 வாகனங்களில் வருகை தந்து கொண்டிருந்தன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு வீதித் தடைகளை ஏற்படுத்தி அவர்களையும் இக் கும்பல் அங்கிருந்து துரத்தியதாகவும் கல்கிரியகம வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவ்விடத்திற்கு வருகை தந்த கல்கிரியாகம பொலிஸார் மது போதையில் அட்டகாசம் புரிந்த மூவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.  

தம்புள்ள தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...