எகிறப் போகிறது எரிபொருள் விலை! | தினகரன்


எகிறப் போகிறது எரிபொருள் விலை!

சவூதியில் பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்; மசகு எண்ணெய் விலை 50 சதவீதம் பாதிப்பு! அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு சவூதியை நம்பியிருந்த நாடுகள் கலக்கம்

ஈரானின் ஆதரவுடனேயே ஹூதி  கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா  விமானங்கள் மூலம் தாக்குதல்  நடத்தியதாக குற்றச்சாட்டு

சவூதி அரேபியா மீது ஹவுதி போராளிக் குழுக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக அங்கு தற்போது மொத்தமாக 50வீத மசகு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2011இல் இருந்து யெமன் நாட்டில் தீவிரமான போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சவூதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீப்பிடித்து எரிவது அந்த நாட்டில் மட்டும் அல்ல, அதை சுற்றியுள்ள உலக நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சவூதி அராம்கோ' என்ற அரச நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும் நடத்தி வருகிறது. இது தவிர உலக நாடுகளின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகத்தையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஆலையொன்று தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ளது. இந்த ஆலையே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமையன்று அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளில்லா விமானத் தாக்குதலால் சவூதி அராம்கோவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் கொழுந்துவிட்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன.

இதனால் மதிப்பிட முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும்,

இதைத் தொடர்ந்து, அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் ஈடுபட்டன என்றும் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலை யெமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது தொடர்பாக அந்த கிளர்ச்சியாளர்களின் 'அல் மசிராஹ்' தொலைக்காட்சியில் வெளியிட்ட செய்தியில், அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் ஆகியவற்றில் கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சவூதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடியான தாக்குதலால் மேலும் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமார் அரைவாசி உற்பத்தி குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மற்ற நிறுவனங்களிலும் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, எரிபொருளுக்காக சவூதியை நம்பியுள்ள நாடுகள் பதற்றத்தில் உள்ளன. ஏனெனில் இறக்குமதி குறையும் போது விலை அதிகரிக்கும் என்றும், மேலும் இந்த தாக்குதலால் சர்வதேச அளவிலும் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் தான் அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு, ஈரானிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை தவிர்த்து, சவூதியிடமிருந்து சில நாடுகள் மசகு எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் எதிரொலி பல நாடுகளில் காணப்படலாம் என்று கருதப்படுகிறது.

ஆள் இல்லாத அதி நவீன ட்ரோன் தொழில்நுட்பம் உலகில் சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. ஈரானிடமும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. இந்த நிலையில் ஹவுதி போராளிக் குழுக்களிடம் இந்த தொழில்நுட்பம் கிடைத்து இருப்பது நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலையடுத்து அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளின் எண்ணெய் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே தற்போது சவூதியின் மசகு எண்ணெய் உற்பத்தி 50வீதமாகக் குறைந்துள்ளது. உலக நாடுகளை இந்தத் தாக்குதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஈரான்தான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற, யெமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி இத்தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ஈரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது யெமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற இராணுவப் படை யெமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளிக்கிறது.

"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது " என பாம்பேயோ தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் செயல்பட்டு உலக ஆற்றல் விநியோகம் தடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும், இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார் பாம்பேயோ.

இதேவேளை பெரட்டில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான யாயா சரியாவில் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர்,"எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.

மேலும்,சவூதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது என்றும், "செளதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கவும், எதிர்கொள்ளவும் சவூதி அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டின் முடியரசர் முகமத் பின் சல்மான் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி முகமையான 'சவூதி ப்ரெஸ் ஏஜென்சி' தெரிவித்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7வீத எரிபொருள் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் மசகு எண்ணெயில் 1வீதம் கிடைக்கிறது.

சவூதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத மசகு எண்ணெய் உற்பத்தியாகிறது. எனவே இந்த தாக்குதலால் இன்று முதல் எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி விமானப் படை மற்றும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ​ெயமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் அரசின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் யெமன் அரசுக்கும், சவூதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...