இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவ அடையாளம் கொடுத்தவர் அஷ்ரப் | தினகரன்


இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவ அடையாளம் கொடுத்தவர் அஷ்ரப்

பத்தொன்பதாவது நினைவு தினம் இன்று

கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி முஸ்லிம்களின் நெஞ்சங்களில் நீங்காத வேதனையை விதைத்த சோக தினமாகும். அரசியலில் அநாதையாக இருந்த முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கி,முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இவ்வுலகை விட்டு நீங்கிய தினம் அன்றாகும்.இன்று அவரது 19வது வருட நினைவு தினமாகும்.

சிறு பராயம் முதல் அல்லாமா இக்பால் அவர்களின் கருத்துக்களின்பால் கவரப்பட்டு சமூகத்தை ஆழமாக நேசித்தவர் அஷ்ரப். அறிஞர் சித்திலெவ்வையின் தனிக்கட்சிச் சிந்தனை இவரில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியல் அடிமைத் தளையில் இருந்துமுஸ்லிம்களை விடுவிக்க பல முயற்சிகளை அவர் கையாண்டார். சிந்தனையாளராக, திறன்மிக்க எழுத்தாளராக, காத்திரமான பேச்சாளராக, துடிப்புள்ள அரசியல்வாதியாக அவர் பணி செய்தார்.

அவரது சாணக்கியமுள்ள தலைமைத்துவ வழிகாட்டலில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவம் 1981ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியினூடாக தோற்றம் பெற்றது. பலமிக்க அக்கட்சியின் ஆற்றல்மிகு தலைவராக இருந்து செயற்பட்டார்.

"முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்தே ஆக வேண்டும். அதற்காக அணிதிரளுங்கள்" என்று 1989இல் தனது கைப்பட எழுதி நாடு பூராகவும் அனுப்பிய கடிதங்கள் அவரது தீர்க்கதரிசனத்திற்கு நல்ல சான்றாகும். எதிரியையும் அரவணைக்கும் பண்பு, கொண்ட கொள்கைமீது வைத்த அசையாத பற்று, ஆழமான சிந்தனை, மொழிப் புலைமை, வாதத்திறன் என்ற அத்தனை அணிகலன்களையும் தன்னகத்தே அவர் கொண்டிருந்தார்.

1988ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையில் 17 ஆசனங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக புதிய பரிமாணத்தை பெற்றுக் கொடுத்தார். சிறுபான்மைச் சமூகங்கள் கௌரவமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும், அது அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுகின்றபொழுது அதே மேசையில் முஸ்லிம்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

1994ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவுடன் கூட்டுச் சேர்ந்து 17 வருட காலம் அரசியலில் ஓரங்கட்டப்பட்டு இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சிபீடத்தில் ஏற்றி வைப்பதற்கு வழிவகுத்தார்.இதன் மூலம் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற, மாற்றியமைக்கின்ற மாபெரும் சக்தியாக முஸ்லிம்கள் மாற்றமடைந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக பல மாடிக் கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தார். மாதிரிக் கிராமங்களை உருவாக்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துறைமுகத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கினார்.தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இவரது மகத்தான வரலாற்றுச் சாதனையாகும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வை வடகிழக்கு பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகத்தினதும் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனுமே காண முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.தலைசாயாத துணிவும், அறிவும், முன்னோக்கிச் செல்லும் அரசியல் தீர்க்கதரிசனமும், தலைமைத்துவப் பண்புகளும், கனிவான பேச்சும், மனித நேயமும் அன்னாரின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் உதவின.

சமூகத்தை ஒன்றுபடுத்தவும், சமூகத்தின் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தவும் அஷ்ரப் செய்த பங்களிப்புகளும், அர்ப்பணங்களும் எண்ணிலடங்காதவை. சமூக விடுதலைக்காகப் போராடி மற்றவர்களையும் போராட வைத்த ஓர் வீர புருஷர்தான் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள். 1989இல் பாராளுமன்றத்தில் முழங்கத் தொடங்கிய குரல் அவர் மரணிக்கும் வரை முஸ்லிம் சமூகத்தின் விடுதலை முரசாக முழங்கியது.

ஒரு அரசியல் ஞானியை அகால மரணம் காவு கொண்டு விட்டது. புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்த தலைவர்களுள் தனிப்பெரும் இடம் அவருக்கு உண்டு. முஸ்லிம் சமூகம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில்,முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டாலேயே அன்னாரது கனவுகளை நனவாக்க முடியும். அதுவே அவருக்கு செய்கின்ற மகத்தான நன்றிக் கடனாகவும் அமையும்.

 


Add new comment

Or log in with...