சுற்றுலாத்துறை திறன் அபிவிருத்தி பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் | தினகரன்


சுற்றுலாத்துறை திறன் அபிவிருத்தி பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைககளில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த 158 பயிலுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

S4IG ஆனது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலான திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு "பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித் திட்டத்தினை" (Workplace -based basic skill development) முன்னெடுத்திருந்தது. இப் பயிற்சி நெறியில் 109 பணித்தள பயிலுனர்கள் (Workplace Trainees), 08 வழிப்படுத்துனர் (Mentors) மற்றும் 41 பணித்தளப் பயிற்சியாளர்கள் (Workplace Trainers) சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எல்.எல். பண்டார நாயக்க மற்றும் S4IG குழுத் தலைவர் டேவிட் ஆப்லெட், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், S4IGன் அம்பாறை மாவட்ட முகாமையாளர்  உ.லே.சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

S4IG இன் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் திட்டமானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், திறன் விருத்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் (MSDVT) வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத் திட்டமானது, மாகாண மற்றும் மாவட்ட அளவிலான அரசாங்க அமைப்புக்கள், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அமைப்புக்கள் உள்ளடங்கிய மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுத்தப்படுகிறது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை (கிழக்கு மாகாணம்) மற்றும் பொலன்னறுவை (வடமத்திய மாகாணம்) ஆகிய இலங்கையின் நான்கு மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மதிப்புச் சங்கிலியில் (value chain) நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வியாபார விருத்திக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டாக இத்திட்டம் அமைகிறது.


Add new comment

Or log in with...