ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் | தினகரன்

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்

- எம்.எஸ்.உதுமாலெவ்வை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது அனைத்து முஸ்லிம் தலைமைகளும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா நிதியினைக் கொண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சுமார் ஐந்து வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது நிதானமாய்ச் சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. ஜனாதிபதித் தேர்தலானது சிறுபான்மைச் சமூகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. நமது சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினரதும் நீண்ட கால நன்மைகளை கருத்திற் கொண்டு நாம் வாக்களிக்க முற்பட வேண்டும்.

பலம் மிக்க எமது ஒற்றுமை மூலம் பேரம் பேசும் சக்திகளை உருவாக்கி நமது மக்களின் ஒட்டு மொத்த நலனுக்காக செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு இந்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளுக்கும் உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் தலைமைகள் மக்களின் உணர்வுக்கு மாறாக செயற்பட்டபோது அனைத்து அரசியல் கட்சித் தலைமைகளையும் விட்டு விட்டு மக்கள் வேறு பாதையில் சென்று விட்டார்கள். இதனைத் தொடர்ந்து மக்களின் பின்னால் அரசியல் தலைமைகள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அவ்வாறான நிலைமை இந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தலையாக கடமை நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இருக்கின்றன. அரசியல் தலைமைகள், புத்தி ஜீவிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடி நமது சமூகத்தின் நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு முடிவினை எடுத்து செயற்பட வேண்டும்.

முஸ்லிம் மக்களின் நன்மைக்காக நின்று செயற்பட்ட பெருந்தலைவரின் வழியில் நின்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது அனைத்து முஸ்லிம் தலைமைகளும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

 

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...