தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நாம் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை | தினகரன்


தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நாம் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை

தென் மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போது அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அல்லது கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கோ எந்தவித அழுத்தமும் நாம் கொடுக்கவில்லையென தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்தார்.

தென் மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வு வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் 699 சிங்கள மொழி மூல ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஆளுநர் இங்கு உரையாற்றுகையில்,

சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இந்த முறைப்படியே நியமனங்கள் வழங்க நாம் விரும்புகிறோம். தகுதியான அனைவரும் எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுவர். நான் ஆளுநர் என்ற வகையில் எடுக்கும் தீர்மாணங்களை நடைமுறைப் படுத்துபவர்கள் அதிகாரிகளே. பிரபாகரனின் மகனாக இருந்தாலும் அவர் ஆசிரியர் நியமனம் பெற தகுதிபெற்றிருப்பின் அவருக்கும் நியமனம் வழங்க பின்நிற்கமாட்டோம். அவ்வாறான நிலையொன்றைத் தான் நாம் தென்மாகாணத்தில் ஏற்படுத்தி வருகிறோம்.

விசேடமாக ஒன்றை நான் குறிப்பிடுகிறேன். அதாவது, நியமனம் கிடைத்தவுடன் சிலர் இடமாற்றம் கோரி வருகின்றனர். அவ்வாறு வரவேண்டாம். தற்போது நீங்கள் ஆரோக்கியமுள்ள இளைஞர் யுவதிகளாக இருக்கிறீர்கள். இக்காலப் பருவத்தில் வெளி மாகாணங்களுக்குச் சென்று அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாம் இக்காலப் பிரிவில் வெளி மாகாணங்களில் கடமை புரிய நல்ல விருப்பமுள்ளவர்களாக இருந்தோம்.

இன்று முதல் நீங்கள் அனைவரும் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு தாய், தந்தையர்.

பாடசாலை ஆரம்பித்தது முதல் முடியும் வரை நீங்கள் தான் பிள்ளைகளின் பெற்றோர்கள். எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப நியமனங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளோம். இன்று நியமனங்கள் கிடைக்காதவர்கள் மனசோர்வு அடையத்தேவையில்லை. முயற்சியுங்கள், புதிதாக நியமனம் பெற்றுச் செல்லும் பாடசாலை அதிபர்கள், பிரதி, உதவி அதிபர்களை கெளரவித்து நடந்து கொள்ளுங்கள். கடமையை சரிவர நிறைவேற்றுங்கள். அவ்வாறு நடந்தால் ஓய்வுபெறும் காலங்களில் சந்தோசப்படுவீர்கள் என்றார்.

வெலிகமதினகரன் நிருபர்


Add new comment

Or log in with...