பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை விடுதலை செய்ய போராட்டம் | தினகரன்


பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை விடுதலை செய்ய போராட்டம்

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மலையக இளைஞர்கள் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மத்துகம பிரதேசத்தில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை புதைக்க தடைவிதித்த தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து, சடலத்தை அடக்கம் செய்த விவகாரத்தில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பாலித தெவரப்பெருமவின் செயற்பாட்டில் சட்டரீதியாக சில தவறுதல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்ற போதிலும் அவரது செயற்பாடு மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியதென்பதால் உடனடியாக பொது மன்னிப்பளித்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென மலையக இளைஞர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.  

இந்தப் போராட்டத்தை மலையக சமூக ஆர்வலர்களான பிரசாத் மற்றும் கணகேஸ்வர் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்ததுடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன், புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் உட்பட பல முக்கிய தலைவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.  

அண்மையில் களுத்துறை, மத்துகம பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில், பல வருடங்களாக தோட்டத்துக்காக உழைத்த தமிழ் முதியவர் ஒருவரின் சடலத்தை தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் அடங்கம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி வழங்க மறுத்திருந்திருந்தார்.  

இந்த விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் பிரதியமைச்சர் பாலித தெவரபெருமவிடம் தோட்ட மக்கள் முறையிட்டிருந்தனர். இதனையடுத்து அதிரடியாகச் செயற்பட்ட பாலித தெவரபெரும, தடையை மீறி சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கையெடுத்திருந்தார். இதனால் பாலித தெவரப்பெருமவின் நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதெனக் கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றில் முறையீடு செய்திருந்தது.  

இந்த வழக்கு விசாரணையில் பாலித தெவரப்பெருமவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரை உடனடியாக விடுதலைச் செய்யுமாறு வலியுறுத்தியே மேற்படி போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, மலையகத்தின் பல்வேறு இடங்களில் பாலித தெவரப்பெருமவை விடுதலைச் செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

 


Add new comment

Or log in with...