2017 / 2018 இல் 84 மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் விநியோகம் | தினகரன்

2017 / 2018 இல் 84 மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்

2 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு

2017/ 2018 ஆம் ஆண்டுகளில் மதுவரித் திணைக்களத்தினால் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள், தனது அனுமதியின்றி எவ்வாறு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து, உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீர, மதுவரித் திணைக்களத்தின்

ஆணையாளர் நாயகம் எச்.ஜி.சுமனசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தினால் இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறைகளுக்கிணங்க, மதுவரி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், விடயத்துக்குப் ​​பொறுப்பான அமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் அல்லது அமைச்சருக்கு அறிவித்ததன் பின்னரே அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும்.

மதுவரித் திணைக்களத்தினால் 2017 இல் 10 புதிய மதுவரி அனுமதிப்பத்திரங்களும் 2018 இல் 74 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிப்பத்திரங்களுக்காக, மதுவரி ஒழுங்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் படி, நிதி அமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ளுதல் அல்லது அமைச்சருக்கு அறிவித்தல் போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரி ஒழுங்குச் சட்டத்தின் கீழ், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால், அவசியம் என்று கருதப்படும் சந்தர்ப்பத்தில் காரணத்தை அறிவிக்காமல் மதுவரி அனுமதிப்பத்தரம் ஒன்றை வழங்கவோ, புதுப்பிக்கவோ அல்லது இரத்துச் செய்யவோ அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அமைச்சரின் அனுமதியின்றி இவ்வாறு வழங்கப்பட்ட மதுவரி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தரவின் பேரில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எச்.ஜி.சுமனசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய மதுபான உற்பத்திச்சாலை அனுமதிப்பத்திரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

-மதுவரித் திணைக்களத்தினால் நான்கு புதிய மதுபான உற்பத்திச்சாலைக்கானஅனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக சில இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது.

இந்த வருடத்தில் மதுவரித் திணைக்களத்தினால், மதுபான உற்பத்திச்சாலைக்கான அனுமதிப்பத்திரங்கள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை என மதுவரி ஆணையாளர் நாயகம் எச்.ஜி.சுமனசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...