குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்போம் | தினகரன்


குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்போம்

குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தாத பெற்றோர் இருக்கவே மாட்டார்கள். என்றாலும் எதிர்பாரா விதமாக இடம்பெறுவது தான் விபத்துக்கள். சிறிதான கவனக்குறைவு குழந்தைகளின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிறரின் பாடங்களை அனுபவமாகக் கொண்டு பெற்றோர் தமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும். 

முக்கியமாக பிறந்த சிசுவுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது புரைக்கேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தாய்மார் படுத்தபடி நித்திரையில் சிசுவுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது பால் புரைக்கேறுவதால் பல சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டுள்ளன. இதனால் தாய் எத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் படுக்கையிலிருந்து எழுந்து சிசுவை தனது இரண்டு கைகளிலும் ஏந்தி தாய்ப்பால் கொடுப்பதனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அதேபோன்று குழந்தை தூங்கும் தொட்டிலில் பூச்சிகள் மற்றும் கடி எறும்புகள் இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

தொட்டிலில் குழந்தையை தவிர்ந்த வேறு எந்தப் பொருட்களும் இருக்கக்கூடாது. உதாரணமாக பொம்மைகள், தலையணைகள் மற்றும் குஷனினாலான பொருட்களை வைப்பதால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. என​வே அவற்றை தொட்டிலிலிருந்து அப்புறப்படுத்தி ஒரு சிறிய போர்வையால் குழந்தையின் கழுத்து பகுதி வரை மூடி விடுங்கள்.  

குழந்தைக்கு அருகில் வைத்து சூடான பானங்கள் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே​ேபான்று குழந்தைக்கு எட்டும் இடத்திலும் சூடான பானங்களை வைக்காதீர்கள். 

மருந்துகள், நச்சுப் பொருட்கள், வாயில் அல்லது மூக்கில் போட்டுவிடக்கூடிய சிறிய அலங்காரப் பொருட்கள், பொத்தான்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை எட்டாத இடத்தில் எடுத்து வையுங்கள். 

குழந்தைகளை குளிக்க வைக்கும்போது நேரடியாக குழாயிலிருந்து வரும் சுடுநீரில் அவர்களை நனைக்காமல், நீரை ஒரு தொட்டியில் சேர்த்து வெப்பநிலையை சரிபார்த்த பின்னர் அவர்களை குளிக்கச் செய்யுங்கள்.  

வாகனங்களில் செல்லும்போது குழந்தைகளை அவர்களுக்கான ஆசனங்களில் பாதுகாப்பாக அமரச் செய்யுங்கள். அல்லது அவர்களை பின் ஆசனத்தில் எவரொருவருடனேனும் அமரச் செய்யுங்கள். 


Add new comment

Or log in with...