ரிஷி சிந்தனை- 45 | தினகரன்


ரிஷி சிந்தனை- 45

பிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த சாதனைக்குரிய பண்புகளாகும். உடல், மன வலிமைகளை கட்டமைப்பதற்கு இவை மிகப் பயனுள்ள விஷயங்கள். எவ்வளவு காலம் பிரம்மச்சரியம் காக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு பிள்ளைகளை பிரம்மச்சரியம் காக்க வைப்பது நல்லது. பொதுவாக ஆண்கள் 21 வயது வரையும் பெண்கள் 18 வயது வரையும் கட்டாயம் பிரம்மச்சரியம் காக்க வேண்டும். அதற்கு மேல் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள் இயலுமான  காலப்பகுதி வரை பிரம்மச்சரியம் காக்கலாம்.

பிரம்மச்சரியம் என்பதன் உண்மையான அர்த்தம், தனது மனதின் மீது கட்டுப்பாட்டினை உருவாக்குதல். மனமானது கற்பனையிலும் உடல் ஆசைகளிலும் இருக்கும் போது உடல் அந்த ஆசைகளை நிறைவேறாமல் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்குமானால் அது மிக ஆபத்தானது. ஒருவனது உடல் சார்ந்த காமத்திற்கான செய்கையை விட அவனது மனம், காம எண்ணத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தால் அது அதிகப் பாதகமானது. ஒருவன் தனது விந்தினை இழந்தால், அது உடலினால் மீண்டும் உருவாக்கப்பட்டு சமப்படுத்தப்படும். ஆனால், அவனது மனம் காம எண்ணங்களில் தத்தளித்துக் கொண்டிருந்தால், அழுத்தப்பட்டுக் கொண்டிருந்தால், அவை அவனைப் பழிவாங்குவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும். பெட்டிக்குள் அடைத்துவைத்திருந்த ஒரு விஷப்பாம்பு எப்படி ஒருவன் இடையூறு செய்தவுடன் பழிவாங்குமோ, அப்படி அடக்கப்பட்ட காம எண்ணங்கள் உடலைப் பழிவாங்கும்.

உளவியல் மருத்துவர்களான ப்ராய்ட் மற்றும் பேர்னே ஆகியோர் அடக்கப்பட்ட ஆசைகள், எமது உணர்வற்ற மனதின் ஆழத்தின் இருண்ட பகுதிகளில், ஆழமாக பதியபட்டு அடங்கிக்கிடக்கின்றன என்கிறார்கள். எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போது பயங்கர உடல் மன நோய்களாக அவை வெளிப்படுகின்றன. மன நோய்கள் எனப்படும் மனச்சோர்வு, உணர்விழத்தல், வலிப்பு, பழக்கங்களுக்கு அடிமையாகி ஆட்டிப்படைக்கும் மனோபாவம், தூக்கமின்மை, இனம்புரியாத பயம் போன்ற நோய்கள் உணர்வற்ற ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் நிறைவேறாத ஆசைகளின் எதிர்மறை வெளிப்பாடு என்பதை நவீன உளவியலும் ஏற்றுக்கொள்கிறது.  இதனால் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க விரும்பும் ஒருவன் முதலில் மனச் சமநிலையினைப் பெற வேண்டும். யாருடைய மனது உயர்ந்த எண்ணங்களால் நிறைந்திருக்கிறதோ, யார், புலன் இன்பங்களில் நாட்டமற்றவரோ, யார், விருப்பு வெறுப்புக்களால் மனம் பாதிக்காமல் அக நோக்கில் தியானத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே உண்மையான பிரம்மச்சரியம் காக்க முடியும்.

அப்படி இல்லாமல் மனதை பலவித புலன் இன்பங்களில் அலைபாய விட்டுக்கொண்டும் தனது மனதின் இயற்கைப் பண்பை கட்டுப்படுத்தாமலும் இருப்பவர் 'பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறேன்' என்று கூறுவது ஒரு முரண் நகையான விஷயம். (தொடரும்)

மூலம்    :  பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யா
தமிழில் :  ஸ்ரீ ஸக்தி சுமனன்


Add new comment

Or log in with...