குழப்பம் மிகுந்த தேர்தல் களம்! | தினகரன்


குழப்பம் மிகுந்த தேர்தல் களம்!

தேர்தல் பரபரப்பு மிகுந்த காலம் இது! நாட்டின் அரசியல்வாதிகள் மாத்திரமன்றி அனைவரது கவனமும் ஜனாதிபதித் தேர்தல் மீதுதான் இப்போது குவிந்திருக்கின்றது. அனைத்து மட்டங்களிலும் மக்கள் இப்போது அரசியலையே பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலாகட்டும், இல்லையேல் பாராளுமன்றப் பொதுத் தேர்தலாகட்டும்... இலங்கையின் கடந்த கால அரசியலில் அத்தேர்தல்களெல்லாம் இருமுனைப் போட்டி மட்டுமே!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியா இல்லையேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியா அதிகாரத்தைக் கைப்பற்றப் போகின்றது என்பது மட்டுமே முன்னரெல்லாம் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இன்றைய அரசியல் களம் அவ்வாறானதாக இல்லை.இன்றுள்ள அரசியல் களநிலைவரத்தைப் பார்க்கின்ற போது, நான்குமுனைப் போட்டி என்றுதான் கூற வேண்டியிருக்கின்றது. அந்த நான்குமே பலத்துடன் மோதிக் கொள்ளக் கூடிய அணிகளாக இருக்கின்றன. எனவே விறுவிறுப்பும் பரபரப்பும் மிகவும் அதிகமாகவே இருக்கப் போகின்றன.

முதலவதாகக் குறிப்பிட வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியாகும். பிரதான முஸ்லிம் கட்சிகள், மலையக முற்போக்கு முன்னணி மற்றும் சிறிய கட்சிகளெல்லாம் ஐ.தே.கவுடனேயே தேர்தலில் கைகோர்க்கப் போகின்றனவென்பது தெரிந்த விடயம். அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமை போல எந்தவொரு பெரும்பான்மை தேசியக் கட்சியுடனும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொள்ளாத போதிலும், இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கப் போகின்றதென்பது தெளிவாகத் தெரிகின்றது.

எனவே பெரும்பான்மையின மக்களில் கணிசமானோரின் ஆதரவுடன் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் ஐ.தே.க தரப்பு பெற்றெடுக்குமென்பதில் ஐயமில்லை.

மறுபுறத்தில் பொதுஜன பெரமுன அணி!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையின மக்களின் ஆதரவை கணிசமான அளவு பெறக் கூடியவராக உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சென்ற அதிருப்தியாளர்களும் பொதுஜன பெரமுனவுடனேயே இணைந்திருப்பதனால், அவர்களும் கோட்டாபயவின் வெற்றிக்காகவே பிரசாரக் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.எனினும் சிறுபான்மையினரின் ஆதரவை கோட்டாபய பெறுவதற்கான வாய்ப்புக்களைக் காண முடியவில்லை.

மூன்றாவது அணியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் களத்தில் நிற்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடுமென்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது. பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சுதந்திரக் கட்சிக்கென்று ஆதரவுத் தளமொன்று நிலையாக உள்ளதென்பதை மறுக்க முடியாது.

நான்காவது தரப்பு மக்கள் விடுதலை முன்னணி எனப்படுகின்ற ஜே. வி. பி.

ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலோ ஜே.வி.பி ஒருபோதுமே முன்னிலை வெற்றியை அடையப் போவதில்லையென்பது தெரிந்த விடயம்.ஆனாலும் ஜே.வி.பிக்கான மக்கள் ஆதரவு கணிசமான அளவு இம்முறை அதிகரித்திருப்பதை காலிமுகத்திடலில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பேரணி எடுத்துக் காட்டியது.

ஜே.வி.பியின் பேரணிக்கு வந்திருந்த மக்களெல்லாம் பலவந்தமாக அழைத்து வரப்பட்டவர்களல்லர். உணவுப் பொதிக்காகவோ அல்லது மதுபானப் போத்தலுக்காகவோ, கொழும்புக்கு புறப்பட்ட பஸ்களில் ஏறிக் கொண்டவர்களல்லர் அவர்கள்!

ஜே.வி.பியின் காலிமுகத்திடல் பேரணியைப் பார்க்கின்ற போது, ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஜே.வி.பி கட்சிக்ெகன்று குறிப்பிடும்படியான ஆதரவுத் தளமொன்று உண்டென்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.அந்த ஆதரவுத் தளம் இப்போது பலமடைந்திருக்கிறது என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயம்.

அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடியதாக அமோக வெற்றியை ஜே.வி.பியினால் ஈட்டிக் கொள்ள முடியாது போனாலும், பிரதான கட்சிகளை நேருக்கு நேர் சந்திக்கின்ற மக்கள் சக்தியை ஜே.வி.பி படிப்படியாகக் கட்டியெழுப்பி வந்திருக்கின்றது என்பது மட்டும் நன்றாகவே தெரிகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் கூட ஜே.வி.பியின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக ஆதிக்கம் செலுத்தக் கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் இரண்டாவது தெரிவை அறியும் நிலைமை ஏற்பட்டு வாக்குகள் எண்ணப்படுமானால், இவ்வாறான நிலைமையொன்று உருவாக இடமுண்டு.

இவற்றையெல்லாம் நோக்குகின்ற போது, இன்றுள்ள தேர்தல் களத்தை நான்கு முனைப் போட்டியெனக் குறிப்படுவதே பொருத்தமாகும்.

இலங்கையின் கடந்த ஏழு தசாப்த கால அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத புதுமையெனவும் இன்றைய அரசியல் களநிலைவரத்தைக் கூற முடியும். எதிரும் புதிருமான இருமுனை அரசியல் போட்டிக்குப் பழக்கப்பட்டுப் போன எமது மக்கள், முதன் முறையாக நான்கு முனைப் போட்டி கொண்ட தேர்தலொன்றை முதல் தடவையாக சந்திக்கிப் போகின்றனர்.

இன ஐக்கியம், ஜனநாயகம், அச்சம் நீங்கிய வாழ்வு, இளைஞர் நலத் திட்டங்கள் என்றெல்லாம் விஞ்ஞாபனங்களை முன்வைத்தபடி ஒரு அணி பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.

தேசியவாதம், பௌத்த மத மேலாதிக்கம் போன்ற எழுச்சிகளை மறைமுகமாக வெளிப்படுத்தியபடி மற்றொரு தரப்பு தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.

மறுபுறத்தில் ஜே.வி.பியினர் எப்போதுமே இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள். பொருளாதார இலக்கு மட்டுமே அவர்களது பிரசாரங்களில் மேலோங்கித் தெரிகின்றது. சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வு பற்றியெல்லாம் ஜே.வி.பியினர் எப்போதும் அக்கறை கொண்டது கிடையாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கே எதிரானவர்கள் அவர்கள்!

இவ்வாறான தேர்தல் களநிலைவரத்தில் மக்களின் கணிப்பு எவ்வாறிருக்கும் என்பதை சற்றும் கூட புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது. இன்றைய அரசியல் குழப்ப நிலையானது மக்களையும் திண்டாட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்பதே உண்மை!


Add new comment

Or log in with...