எமது குடலுக்குள் உள்ள நுண்கிருமிகளின் தாக்கம், வேலைகள் | தினகரன்


எமது குடலுக்குள் உள்ள நுண்கிருமிகளின் தாக்கம், வேலைகள்

சுமார் 300முதல் 10,000 வகையான கிருமிகள் தாங்கள் வாழும் குடியிருப்புகளாக நமது குடலை ஆக்கியுள்ளன

எமது குடலுக்குள் எண்ணற்ற நுண்கிருமிகள் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றால் எண்ணற்ற  தாக்கங்களும் வேலைகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இது போன்ற கிருமிகள் குடலுக்குள் இருப்பதில்லை. ஆனால், தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கிருமிகள் குடலைச் சென்றடைகின்றன. பாக்டீரியா வகைகள், ஈஸ்ட், பூஞ்சை வகைகள், வைரஸ் கிருமிகள், ஒட்டுண்ணிகள் என அனைத்தும் அடங்கியவைதான் குடலுக்குள் வாழும் நுண்கிருமிகள்.

குடலில் வாழும் பல்வேறு நுண்கிருமிகளைக் குறித்து அறிய இரத்தப் பரிசோதனைகள் கூட வர இருக்கின்றன.

அதில், இந்தக் கிருமிகளின் மூலக் கூறுகள் கண்டறியப்படும்.

இந்த நுண்கிருமிகள் உடலில் ஆற்றும் பணிகள், தாக்கங்கள் இதனால் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இதனால்தான் இவற்றின் பங்கு குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. அது இன்னும் முடிந்த பாடில்லை. வருங்காலம் இவை குறித்து நமக்குத் தெளிவைத் தரும் என்று நம்புவோம்

முக்கிய கிருமிகள்

லாக்டோபேசிலஸ், பைஃபைடோ பாக்டீரியம் ஆகிய நுண்கிருமிகள் தான் இதுவரை அதிகம் ஆராயப்பட்டுள்ளன.

லாக்டோபேசிலஸ் கிருமி தரும் நன்மைகள்:

 லாக்டோபேசிலஸ், இரைப்பை, முன் சிறுகுடலில் புண்களை ஏற்படுத்தும் கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

 ‘ஆன்டிபயாட்டிக்' எனப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடுக்கிறது.

 கல்லீரலில் சேரும் கொழுப்பு, நீரிழிவு நோய், எய்ட்ஸ், சிறுநீர் செல்லும் பாதைகளில் ஏற்படும் அழற்சி ஆகிய பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது.

பைஃபைடோ பாக்டீரியம் கிருமி தரும் நன்மைகள்:

 பெருங்குடல் புற்றுநோய், குடல் அழற்சி நோய், உடல் பருமன், குடல் எரிச்சல் நோய் ஆகிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவுபவையாக இந்தக் கிருமிகள் இருக்கின்றன.

 மேலும் இந்த இரண்டு கிருமிகளும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸுக்கு எதிராகச் செயல்படுகின்றன.

செழிக்கும் நுண்கிருமிகள்

நுண்கிருமிகள், நமது குடலில் சுமார் 1.5கிலோ அளவுக்கு இருக்கும்.

மனித உடலிலுள்ள மொத்த செல்களின் எண்ணிக்கையைவிட இந்தக் கிருமிகளின் எண்ணிக்கை 10மடங்கு அதிகம்.

மனித உடலிலுள்ள மரபணுக்களின் எண்ணிக்கையைவிட இந்த நுண்கிருமிகளின் மரபணுக்களுடைய எண்ணிக்கை நூறு மடங்கு அதிகம்.

பாக்டீரியா என எடுத்துக்கொண்டால், சுமார் 300முதல் 10,000வகையான கிருமிகள் தாங்கள் வாழும் குடியிருப்புகளாக நமது குடலை ஆக்கிவிட்டன.

30-40வகையான இனங்களைச் சேர்ந்த நுண்கிருமிகளே குடலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

குடலுக்குள் இப்படி வாழ்ந்து வரும் நுண்கிருமிகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பதெல்லாம் உலகத்திலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது, அவர்களின் வயது, பாலினம், மனித இனம், வாழும் சூழ்நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள், மரபியல் தன்மை ஆகிய பல காரணங்களால் மாறுபடும், வேறுபடும்.

நன்மைகள் எப்படிச் சில

தாவரங்களின் வேர்களில் வாழும் நுண்கிருமிகள் அந்தத் தாவரத்தை வைத்து வாழ்ந்துகொண்டு அதேநேரம், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து தருகின்றன. அதேபோல உடலுக்குத் தேவையான சில வகைச் சத்துக்கள் கிடைப்பதற்கும், உணவு ஜீரணமாவதற்கும் இந்த நுண்கிருமிகள் உதவுகின்றன. நமது உடல் எதிர்ப்பாற்றல் செயல்பாட்டுக்கும் இவை பங்களிக்கின்றன. ஜலதோஷம், கல்லீரல் நோய்கள், குடல் அழற்சி நோய்கள், பற்சிதைவு, ஒவ்வாமை நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு இவை பயன் தரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

உற்பத்தியாகும் பொருட்கள்

இந்த நுண்கிருமிகளின் முக்கிய உற்பத்திப் பொருள், லைப்போ பாலி சாக்ரைடு (lipopolysaccharide (LPS) என்பதாகும். இது உட்கிரகிக்கப்பட்டு உடலின் எதிர்ப்புத் திறன் மேம்பட உதவுகிறது. மற்றொரு உற்பத்திப் பொருளான டிரைமெத்திலமைன்(Trimethylamine (TMA)) உடலில் ஏற்படும் நோயின் தன்மையைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இவை, நமது சிறுகுடல், பெருங்குடல் உட்பகுதியிலும் குடலால் உற்பத்தியாகும் சளி போன்ற படலத்தின் உட்பகுதியிலும் காணப்படும். இரைப்பையில் உள்ள அமிலத்தன்மையால் இவை அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில்லை.

பயாட்டிக் வகைகள்

புரோபயாட்டிக், பிரீபயாட்டிக், சின் பயாட்டிக் ஆகியவை மருத்துவர் களால் அதிகம் உச்சரிக்கப்படுகின்றன.

புரோபயாட்டிக் புரோபயாட்டிக் என்பது நமது குடலுக்குச் சென்று நன்மை செய்யும் உணவாகும். இந்த உணவில், குடலுக்குள் சென்று வாழ்வைத் தொடங்கி நமக்கு நன்மை செய்யும் பாக்டீரியா, ஈஸ்ட் நுண்கிருமிகள் மிகுந்து இருக்கும்.

பாலாடைக்கட்டி, தயிர், பாலில் தயாரிக்கப்படும் கெபிர், புளிக்க வைக்கப்பட்ட முட்டைக்கோஸ், சோயா பீன், தேநீர், மோர் ஆகியவை முக்கிய புரோபயாட்டிக் உணவுகள். இந்த உணவுகளில், லாக்டோபேசிலஸ், பைஃபைடோ பாக்டீரியம் ஆகிய பாக்டீரிய வகைகளும், சாக்ரோமைசீஸ் (Saccharomyces boulardii ) என்ற பூஞ்சை வகை கிருமியும் இருக்கும்.

பிரீபயாட்டிக்

பிரீபயாட்டிக் என்பது நாம் உட்கொள்ளும் சில வகை உணவுகள் ஆகும். இது நன்மை செய்யும் கிருமிகள் வளர உதவுகிறது. இவ்வகை உணவுகளில், விசேஷ நார்ச்சத்து இருக்கும். பூண்டு, வெங்காயம், வாழைப்பழம், கடற்பாசி, கோதுமைத் தவிடு, ஆளி விதை, ஆப்பிள், ஓட்ஸ், பார்லி, (அஸ்பராகஸ்) தண்ணீர் விட்டான் கொடி, கோக்கோ ஆகியவை இவ்வகை உணவுகளுக்கு உதாரணம்.

சின் பயாட்டிக்

சின் பயாட்டிக் என்பது புரோபயாட்டிக், பிரீபயாட்டிக் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும்.

இப்படி இவற்றால் பல்வேறு நன்மைகள் ஏற்பட்ட போதிலும், எல்லோரும் இந்த நுண்கிருமிகள் அடங்கிய மருந்துகளை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை.

ஏனென்றால், எல்லா மனித உடலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனித உடல் ஆரோக்கியம், அவருக்கு ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நோய்கள், அதற்காக உட்கொள்ளும் மருந்துகள், தற்போது அவரின் உடல் நிலை, அவருக்கு உள்ள குடல் நோய்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், அருந்தும் மது, உடல் எதிர்ப்பாற்றல் எனப் பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்து தான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப் பரிந்துரை செய்வார்கள்.

முஹம்மத் மர்லின்


Add new comment

Or log in with...